மின் கம்பத்தில் தொங்கும் கம்பிகளால் விபத்து அபாயம்

சேலம், ஆக.22:  தமிழகம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் மின் கம்பங்களில், கம்பிகள் தூளி போல் தொங்கி கொண்டிருப்பதால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். தமிழகம் முழுவதும் 75 லட்சத்திற்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் உள்ளன. அனல் மின் நிலையம், நீர் மின் நிலையங்களில் இருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் உயர்கோபுரம் மின் கோபுரங்கள் மூலம் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு கொண்டு சென்று, டிரான்பார்மர் மூலம் வீடுகளுக்கு  சப்ளை செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் ஒரு மின் கம்பத்திற்கு மற்றொரு மின் கம்பத்திற்கு இடையே இருக்கும் மின் கம்பிகள் தூளி போல் தொங்கி கொண்டு இருக்கிறது. வாகனங்கள் உரசும் அளவிற்கும், மக்கள் தொடும் அளவிலும் உள்ளது. தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், இதுபோன்ற மின்கம்பிகளால் ஏற்படும் அபாயங்களை கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Advertising
Advertising

இது குறித்து சேலத்தை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: தமிழகத்தில் பெரும்பாலான மின் கம்பங்களில் மின் கம்பிகள் கைகளில் தொடும் அளவில் தான் தொங்கிக்கொண்டு இருக்கிறது. ஒரு இடத்தில் மின் கம்பம் அமைக்கும் போது, கம்பிகள் ெதாங்காத அளவில் இழுத்து கட்டப்படுகிறது. ஆனால் நாளாடைவில் வெயில், மழை காரணமாக மின்கம்பிகள் தளர்ந்துவிடுகின்றன. இதன் காரணமாக பெரும்பாலான இடங்களில் மின்கம்பிகள் தொங்கிக்கொண்டு இருக்கிறது. இந்த மின்கம்பிகளை வாகனங்கள் உரசிச்செல்கிறது. பல இடங்களில் மின் கம்பங்கள் அமைக்கும்போது, அடி பகுதியில் கான்கிரீட் சுவர் அமைக்கப்படுகிறது. சில இடங்களில் இந்த கான்கிரீட் சுவர் இடிந்தும், சில மின் கம்பங்களில் கான்கிரீட் சுவர் சுவடே இல்லாத அளவிலும்  மொட்டையாக இருக்கிறது. இதன் காரணமாக சிறு மழைக்கே சில இடங்களில் மின்கம்பங்கள் கீழே விழுந்துவிடுகிறது.

இதேபோல் மின் கம்பங்களிலிருந்து வீடுகளுக்கு செல்லும் மின் இணைப்பு ஒயர்களும் வாகனங்கள் உரசு நிலையிலும், மக்கள் தொடும் அளவிலும் உள்ளது. தற்போது மழைக்காலம் என்பதால் மின் விபத்துக்கள் அதிகம் நடக்க வாய்ப்புள்ளது. மின் விபத்தை எவ்வாறு தடுப்பது என்பது குறித்து, மின்வாரியம் பல்வேறு எச்சரிக்கைகளை  விடுத்து வருகிறது. இது போன்ற மின் கம்பிகளால் ஏற்படப்போகும் அபாயங்களையும், உயிரிழப்புகளையும் தடுக்க, ஆங்காங்கே தொங்கி கொண்டு இருக்கும் மின் கம்பிகளை உயர்த்தி கட்ட வேண்டும். இதற்கு சம்பந்தப்பட்ட மின் வாரிய அதிகாரிகள், போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.

Related Stories: