×

அதிகரிக்கும் நகை பறிப்பு பகல் ரோந்து பணியை தீவிரப்படுத்த கோரிக்கை

நாமக்கல், ஆக.22:நாமக்கல் நகரில் நகை பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருவதால், போலீசார் பகல் நேர ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாமக்கல்லை சேர்ந்தவர் ரமீலா(35) கூட்டுறவு வங்கியில் காசாளராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 15ம் தேதி, கலெக்டர் அலுவலக விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பங்கேற்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார். நாமக்கல்லை அடுத்த நல்லிபாளையம் புறவழிச்சாலை அருகே டுவீலரில் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த மர்ம நபர்கள் 2 பேர், ரமீலா அணிந்திருந்த 7 பவுன் நகையை பறித்து கொண்டு தப்பினர். இதேபோல், நாமக்கல் நகர் பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்செல்வி(43). கடந்த 18ம் தேதி சேலம் ரோட்டில் பணி நிமித்தமாக காரில் சென்றார். தொடர்ந்து, காரை பூட்டி விட்டு நிறுத்தி சென்றார். பணி முடிந்து வீடு திரும்ப காருக்கு வந்தார். அப்போது காரின் ஒரு பக்க கண்ணாடி உடைக்கப்பட்டு, பேக்கில் இருந்த 7 பவுன் நகையை மர்மநபர்கள் திருடி சென்றனர்.

இந்த 2 நகை திருட்டு சம்பவங்களும் அந்த பகுதியில் உள்ள சிசிடிவியில் பதிவாகி உள்ளது. இந்த சம்பவங்கள் தொடர்பாக நல்லிபாளையம், நாமக்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஒரு வாரத்தில் பட்டப்பகலில் 2 திருட்டு சம்பவங்கள் நடந்தது பொது மக்களை பீதி அடைய செய்துள்ளது. எனவே, போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபடுவது போல், பகல் ரோந்து பணியிலும் ஈடுபட்டு நகை திருட்டை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED எக்ஸல் பொறியியல் கல்லூரி ஆண்டு விழா