×

காவிரிக்கரையில் கொட்டப்படும் சாயக்கழிவுகளின் மாதிரி ஆய்வுக்கு அனுப்பி வைப்பு

பள்ளிபாளையம், ஆக.22: பள்ளிபாளையம் காவிரிக்கரையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட மாசு கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள், அங்கு கொட்டப்படும் சாயக்கழிவுகளின் மாதிரிகளை சேகரித்து, ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். பள்ளிபாளையம் காவிரிக்கரையில் ரயில்வே துறைக்கு சொந்தமான இடத்தில் சாயக்கழிவுகள் கொட்டப்பட்டு வருவது குறித்து தினகரனில் நேற்று முன்தினம் செய்தி வெளியானது. இதையடுத்து மாசு கட்டுப்பாட்டு துறையின் ஈரோடு பறக்கும்படை அதிகாரி சாமிநாதன், உதவி பொறியாளர் செல்வகுமார் ஆகியோர், சம்மந்தப்பட்ட இடத்திற்கு விரைந்தனர். அங்கு மூட்டை, மூட்டையாக கொட்டப்பட்டிருந்த கழிவுகளை பார்வையிட்டனர். பின்னர், அந்த மூட்டைகளை பிரித்து அதில் இருந்த சாயக்கழிவுகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘மூட்டைகளில் உள்ள கழிவுகள் சாம்பலை போன்ற நிறத்தில் உள்ளது. இது சாயப்பட்டறைகளின் பாய்லர் சாம்பலாக இருக்கலாம். இதுகுறித்து ஆய்வுக்கு அனுப்பி அறிக்கை பெறப்படும்,’ என்றனர்.

இதனிடையே, அதிகாரிகள் ஆய்வுக்கு வந்த செய்தி கேட்டு, அங்கு தடை செய்யப்பட்ட கைச்சாயச்சாலை சங்க நிர்வாகிகள் பலர் விரைந்தனர். ஆனால், மாதிரிகளை சேகரித்த அதிகாரிகள் அதற்குள் அங்கிருந்து சென்று விட்டனர். இதையடுத்து அதிகாரிகளை தொடர்பு கொண்ட சங்க நிர்வாகிகள், அங்கு சாயச்சாலைகளில் இருந்து வெளியாகும் சாம்பலும், கழிவுகளும் கொட்டப்பட்டுள்ளது. இதில் கழிவுகளை விட்டுவிட்டு சாம்பலை மட்டும் சேகரித்து செல்வது சரியான ஆய்வாக இருக்காது என தெரிவித்தனர். இதுதொடர்பாக எழுத்து மூலம் புகார் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என பறக்கும்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags :
× RELATED வாக்கு இயந்திரம் பழுது வாக்குப்பதிவு தாமதம்