×

பயன்பாடின்றி கிடக்கும் கூடுதல் பள்ளி கட்டிடத்தில் கால்நடை மருத்துவமனை

கிருஷ்ணகிரி, ஆக.22:  சின்னமுத்தூரில் பயன்பாட்டில் இல்லாத பள்ளி வகுப்பறை கட்டிடத்தில், பகுதி நேர கால்நடை மருத்துவமனை தொடங்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காவேரிப்பட்டணம் ஒன்றியம் சின்னமுத்தூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சுண்டேகுப்பம், கம்பளிக்கான்கொட்டாய், ஆரிபூசாரிக்கொட்டாய், பச்சைக்கொட்டாய் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து 65 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். போதுமான வகுப்பறை கட்டிடங்கள் உள்ள நிலையில், கடந்த 2011-12ம் ஆண்டு ஒருங்கிணைந்த பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 7.20 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்டப்பட்டது. ஆனால், கட்டி முடித்து 9 ஆண்டுகளாகியும், புதிய கட்டிடம் இதுவரை பயன்பாட்டிற்கு வரவில்லை. மாணவ, மாணவிகளுக்கு தேவையான வகுப்பறை கட்டிடங்கள் ஏற்கனவே உள்ளதால், இந்த கட்டிடத்தில் பகுதி நேர கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘பள்ளிக்கட்டிடம், ஏரியை ஒட்டிவாறு கட்டப்பட்டுள்ளதால்,  இதன் பின்புறம் புதர் மண்டி கிடக்கிறது. சுண்டேகுப்பம் ஊராட்சியில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடு, மாடுகள் வளர்க்கப்படுகின்றன. இங்குள்ள கால்நடைகளுக்கு சிகிச்சை மேற்கொள்ள, சுமார் 3 கிமீ தொலைவில் உள்ள பெரியமுத்தூர் ஊராட்சிக்கு செல்ல வேண்டியுள்ளது. எனவே, எந்தவிதமான பயனுமின்றி கிடக்கும், இக்கட்டிடத்தில் பகுதி நேர கால்நடை மருத்துவமனையை தொடங்க, கால்நடைத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.

Tags :
× RELATED சீதாராமர் திருக்கல்யாணம்