×

விளை நிலங்களில் குழாய் பதிக்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்

கிருஷ்ணகிரி, ஆக.22:  விவசாய விளை நிலங்களில் குழாய்கள் பதிக்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் திமுக எம்எல்ஏக்கள் கலெக்டர் பிரபாகரிடம் மனு கொடுத்தனர். தளி எம்எல்ஏ பிரகாஷ், வேப்பனப்பள்ளி எம்எல்ஏ முருகன், ஓசூர் எம்எல்ஏ சத்யா ஆகியோர் கலெக்டர் பிரபாகரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதி சூளகிரி தாலுகா, தேன்கனிக்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட ராயக்கோட்டை, பீர்ஜேப்பள்ளி, அளேசீபம், காமன்தொட்டி, சாமனப்பள்ளி ஆகிய பகுதிகளில் உள்ள விவசாய விளை நிலங்களில் குழாய் பதிக்க பெட்ரோலிய நிறுவனம் விவசாயிகளுக்கு கடிதம் அனுப்பி உள்ளது. அதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ஆழியாளம் அணை பகுதியில் இருந்து 50 ஆண்டுகளுக்கு மேலாக ஆண்டு முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை இன்றி நெல், வாழை, தென்னை மற்றும் காய்கறிகளை விவசாயிகள் பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறார்கள். மேலும் இப்பகுதி விவசாயிகள் ஒரு ஏக்கருக்குள் உள்ள சிறு விவசாயிகள். இவர்கள் விவசாயத்தை நம்பியே உள்ளனர்.

இந்நிலையில், விவசாய விளை நிலங்களில் பெட்ரோலிய நிறுவனம் இருகூர்-தேவனகுந்தி குழாய் பதிப்பு திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு நோட்டீஸ் வழங்கி உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் விவசாய விளை நிலங்களில் வழியாக குழாய்கள் கொண்டு செல்ல மத்திய, மாநில அரசுகள் அனுமதி அளிக்காமல் விவசாயிகளை காப்பாற்ற வேண்டும். தென்பெண்ணை ஆற்றின் ஓரம் அரசு நிலம் உள்ளதால், நெடுஞ்சாலை ஓரங்களில் பெட்ரோலிய குழாய்களை கொண்டு செல்ல திட்டத்தை மாற்றி அமைக்க மத்திய, மாநில அரசுகளை கேட்டுக் கொள்கிறோம். எனவே, இந்த திட்டத்தை ரத்து செய்து வேறு பாதையில் கொண்டு செல்ல புதிய திட்டத்தை உருவாக்கி விவசாயிகளை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags :
× RELATED சூதாடிய 3 பேர் கைது