அல்லிநகரத்தில் ஏரியில் குவிந்த பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றி சிறுவர்கள் அசத்தல்

பாடாலூர்,ஆக 22: ஆலத்தூர் தாலுகா அல்லிநகரம் கிராமத்தில் இளைஞர்கள் மற்றும் பொதுமக்களின் விடாமுயற்சி மற்றும் ஈடுபாட்டினால் சுமார் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஊரில் உள்ள ஊர் ஏரிக்கு நீர் வந்துள்ளது. மழை நீரோடு சேர்ந்து வந்து கரை ஒதுங்கியுள்ள பிளாஸ்டிக் குப்பைகளை அந்த ஊர் இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் இணைந்து ஆர்வமுடன் அகற்றியதை பொதுமக்கள் அனைவரும் பாராட்டினர்.ஆலத்தூர் தாலுகா அல்லி நகரம் கிராமத்தில் உள்ள ஊர் ஏரிக்கு தண்ணீர் வந்து ஏறக்குறைய 8 வருடங்களுக்கு மேல் ஆகிறது. அந்த பகுதியில் நிலவும் தண்ணீர்த் தட்டுப்பாடு, ஏரிகுளங்கள் மற்றும் வரத்துவாய்க்கால்களின் அவசியத்தை உணர்ந்த ஊர் இளைஞர்கள் பொதுமக்களின் ஒத்துழைப்புடன் நிதி திரட்டி ஊர் ஏரி மற்றும் தெற்கு குலாம் ஏரி என்ற இரு ஏரிகளில் இருந்த சீமைக்கருவேல மரங்களை அகற்றி, முறையாக ஆழப்படுத்தி, பாலங்கள் அமைத்து நீர்வரத்துகளை சீர் செய்தனர். அதன் பயனாக கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையில் இரண்டு ஏரிகளிலும் தண்ணீர் ஓரளவிற்கு வந்துள்ளது. குறிப்பாக ஊர் ஏரிக்கு எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஊர் ஏரிக்கு தண்ணீர் வந்துள்ளது பலரையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியது. ஊர் ஏரியில் உள்ள நன்னீர்க்கிணறு பல வருடங்களாக வறண்டு போய்க் காணப்பட்டது. ஏரிக்கு வந்துள்ள நீரால் இப்போது கிணற்றில் நீர் ஊறத் தொடங்கியுள்ளது. இதே போல இந்த ஏரியின் கரைப் பகுதியில் உள்ள அடிபம்பில் ஏரிக்கு தண்ணீர் வந்ததும் தண்ணீர் வர ஆரம்பித்தது இளைஞர்கள் மற்றும் பொதுமக்களின் மனதில் கூடுதல் நம்பிக்கையை வளர்ததுள்ளது.

இந்நிலையில் ஏரிக்கு நீர் வந்துள்ளதையடுத்து ஏரியின் கரைகளில் ஆல், அரசு உள்ளிட்ட மரக்கன்றுகளையும், பனை விதைகளையும் ஊர் இளைஞர்களின் ஒத்துழைப்போடு விதைத்துள்ளனர். ஏரிக்கு அதிகப்படியான நீர் வந்துள்ளதையடுத்து ஏரிக்கரையில் இளைஞர்கள்ஒன்று கூடி பொதுக்கிணற்றை பராமரிப்பது பற்றிய ஆலோசனை மேற்கொண்டனர். அப்போது அங்கு வந்திருந்த இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் ஏரிக்கு மழை நீருடன் வந்திருந்து, கரை ஒதுங்கிய நெகிழிப் புட்டிகள் உள்ளிட்ட நெகிழிக் குப்பைகளை ஆர்வமுடன் சேகரித்தனர். அதோடு ஏரிகுளங்கள் மற்றும் வரத்துவாய்க்கால்கள் உள்ளிட்டவைகளில் குப்பைகளை போட மாட்டோம்,ஏரிகுளங்கள் மற்றும் நீர்வழித்தடங்களை பாதுகாப்போம் உள்ளிட்ட உறுதிமொழிகளையும் எடுத்துக் கொண்டனர். ஏற்கனவே ஏரிகள் சீரமைப்பு பணிகளில் இளைஞர்கள் இணைந்து தங்களால் இயன்ற பணிகளை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
× RELATED பெரம்பலூர் மாவட்டத்தில் 4 இடங்களில் சிறப்பு திட்ட முகாம்