கலெக்டர் தகவல் மருதையாற்றில் வெள்ளப்பெருக்கு கரையோரம் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்க வருவாய்த்துறை எச்சரிக்கை

பெரம்பலூர், ஆக. 22: பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் மருதையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோரம் வசிப்போர் பாதுகாப்பாக இருக்க வருவாய்த்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளாக பருவமழை பொய்த்து போனதால் ஏரி, குளங்கள் வறண்டு காணப்படுகிறது. இதன் காரணமாக வேளாண்மை தொழில் முழுமையாக பாதிக்கப்பட்டதோடு நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீருக்கே திண்டாடும் அவலம் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் கடந்த 19ம் தேதி மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பெரம்பலூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்தது. லேசான சூறைக்காற்று வீச துவங்கினாலும் பின்னர் காற்று எதிர்ப்பின்றி கனமழை கொட்டி தீர்த்தது. அப்போதும் மாவட்ட அளவில் பெய்த 200 மில்லி மீட்டரில் பெரம்பலூரில் மட்டும் 67 மில்லி மீட்டர் கொட்டி தீர்த்தது. இதனால் தெருக்களில் ஆறுகளை போல் சென்ற மழைநீர் துறைமங்கலம் அவ்வையார் தெருக்களில் 50க்கும் மேற்பட்ட வீடுகளில் புகுந்தது.

இதையடுத்து 20ம் தேதி மாவட்ட அளவில் பெய்த 350 மில்லி மீட்டர் மழையில் பெரம்பலூரில் மட்டும் 38 மில்லி மீட்டர் மழை கொட்டி தீர்த்தது. பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக அடைமழை பெய்து வருவதால் கீழக்கணவாய், ரெங்கநாதபுரம், தம்பிரான்பட்டி பகுதிகளில் உள்ள பச்சைமலை தொடர்ச்சியிலிருந்து உற்பத்தியாகும் மருதையாற்றில் நேற்று திடீர் வெள்ள பெருக்கு ஏற்பட்டது. இதனால் ரெங்கநாதபுரம், புதுநடுவலூர், நொச்சியம், விளாமுத்தூர் வழியாக செல்லும் மருதையாற்றில் கரைகள் ததும்ப வெள்ள பெருக்கு காணப்பட்டது. குறிப்பாக புதுநடுவலூர் பகுதியில் ஏற்பட்ட வெள்ள பெருக்கால் அதிகரித்த மழைநீர் ஆற்றோரம் இருந்த சில வீடுகளில் புகுந்துள்ளது. மேலும் புதுநடுவலூர் தென்புறம் உள்ள மலையடிவார மழைநீர் வயல்களை கடந்து ஆதிதிராவிடர்தெரு, அருந்ததியர் தெருக்களில் உள்ள 20க்கும் மேற்பட்ட வீடுகளில் புகுந்துள்ளது. இந்நிலையில் நேற்று அடைமழை பெய்ததால் அப்பகுதியில் மாலை 6 மணி முதல் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் ஆற்றோர பகுதி பொதுமக்கள் அச்சத்துடனே வீடுகளில் கண்விழித்து காத்து கிடந்தனர். இருந்தும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கி கொள்ள வருவாய்த்துறை சார்பில் கிராம நிர்வாக அலுவலர்களால் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

Tags :
× RELATED மத்திய, மாநில அரசுகளின் பட்ஜெட்டை...