64,569 மக்காச்சோள விவசாயிகளுக்கு ரூ.32 கோடி நிவாரணத்தொகை வழங்கல்


பெரம்பலூர், ஆக. 22: பெரம்பலூர் மாவட்டத்தில் படைப்புழு தாக்குதலால் பாதிப்படைந்த 64,569 மக்காச்சோள விவசாயிகளுக்கு ரூ.32.168 கோடி நிவாரணத்தொகை வழங்கப்பட்டுள்ளது.இதுகுறித்து பெரம்பலூர் கலெக்டர் சாந்தா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்தாண்டு 61 ஆயிரம் எக்டேரில் மக்காச்சோள பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டது.ஆனால் அப்பயிரில் 50 சதவீத பரப்புக்கு மேல் படைப்புழுவால் சேதமடைந்து மிக குறைந்த அளவே மகசூல் பெறப்பட்டது. அதனால் தமிழக அரசு இயற்கை பேரிடர் நிவாரண நிதி கோரி விவசாயிகள் சார்பில் கோரிக்கை அனுப்பப்பட்டது.அதன் அடிப்படையில் தமிழக முதல்வரால் சட்டமன்றத்தில் படைப்புழு தாக்குதலால் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டது. அதைதொடர்ந்து தமிழக அரசு பெரம்பலூர் மாவட்டத்துக்கு படைப்புழு சேத நிவாரண தொகையாக ரூ. 32.184 கோடியை ஒதுக்கியது.அதில் பெரம்பலூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 4 வட்டாரத்தில் 43,433 எக்டர் பரப்புக்கு 64,569 விவசாயிகளுக்கு மொத்தம் ரூ.32.168 கோடி இதுவரை வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 1.64 லட்ச ரூபாய் இம்மாத இறுதிக்குள் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அனுப்பப்படவுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
× RELATED கவிஞர் மருதகாசிக்கு நூற்றாண்டு விழா...