குற்ற சம்பவங்களை தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் வியாபார நிறுவனங்களுக்கு அறிவுரை

ஜெயங்கொண்டம், ஆக. 22: ஜெயங்கொண்டத்தில் அதிகளவில் குற்ற சம்பவங்கள் நடைபெறும் இடங்களான பள்ளிகள், தியேட்டர், திருமண மண்டபங்கள், பெட்ரோல் பங்க், பஸ், நகைக்கடை, பாத்திரக்கடை, ஹோட்டல், வனிக நிறுவனங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. ஜெயங்கொண்டம் இன்ஸ்பெக்டர் ராஜ்மோகன் வரவேற்றார். ஜெயங்கொண்டம் டிஎஸ்பி மோகன்தாஸ் பேசும்போது, இப்பகுதியில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்கள், பெட்ரோல் பங்க், அடகு கடைகள், நகைக்கடைகள், வங்கிகளில் அலாரம் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும், கடைகளில் அமர்த்தப்படும் பணியாளர்களின் முழு விபரங்களை பெற்று போலீஸ் நிலையத்துக்கு தெரிவிக்க வேண்டும். கடையில் சந்தேகபடுமாறு நபர் யாராவது இருப்பதாக தெரியவந்தால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும், பொதுமக்கள் அசம்பாவிதங்களை தடுக்க போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். நிறுவனங்களில் பொருத்தப்படும் கேமராக்கள் தரமானதாக இருக்க வேண்டும். போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வியாபாரிகள் சாலைகளில் உள்ள ஆக்கிரமப்புகளை அகற்றி ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

நள்ளிரவில் பணியாற்றும் கார், ஆட்டோ டிரைவர்கள் சந்தேகப்படும்படியாக நடமாட்டத்தில் இருந்தால் போலீசாருக்கு தகவல் கொடுக்க வேண்டும். வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் முன்பின் தெரியாதவர்கள் விலாசம் (அ) தண்ணீர் கேட்டு வந்தாலோ மின் பணியாளர், காஸ், கேபிள் டிவி சீரமைப்பாளர் என கூறி வந்தால் அவர்களை அனுமதிக்க வேண்டாம். ஆதாரம் மற்றும் ஐடி கார்டு காண்பித்தால் மட்டுமே உள்ளே செல்ல அனுமதிக்க வேண்டும். தற்போது பொதுமக்களுக்கு உதவியாக வந்துள்ள ஆண்ட்ராய்டு போனில் பதிவு செய்து கொள்ளும் வகையில் உள்ள காவலன் ஆப்சை பதிவிறக்கம் செய்து புகார்களை பதிவு செய்யலாம். பெண்களுக்கு இது மிகவும் உதவியாக இருக்கும் என்றார். கூட்டத்தில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பள்ளி, கல்லூரி, தியேட்டர், திருமண மண்டபம், பெட்ரோல் பங்க், பஸ், நகைக்கடை, பாத்திரக்கடை, வணிக நிறுவனம், ஹோட்டல்களின் உரிமையாளர்கள் பங்கேற்றனர்.

Tags :
× RELATED பெரம்பலூர் மாவட்டத்தில் 4 இடங்களில் சிறப்பு திட்ட முகாம்