போக்குவரத்துக்கு இடையூறாக சாலையின் நடுவே மின்கம்பங்கள் வாகன ஓட்டிகள் அவதி

கரூர்,ஆக.22: கரூர் இபி காலனி ஆதிவிநாயகர் கோயில் தெரு அருகேயுள்ள குறுகிய தெருவில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மின்கம்பங்களை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
கரூர் ராமானூர் பகுதியில் இருந்து இபி காலனி செல்லும் வழியில் ஆதி விநாயகர் கோயில் தெருக்கள் உள்ளன. இந்த தெருவில் இருந்து எதிர்ப்புறம் குறுக்குத்தெரு உள்ளது. இந்த தெருவில் வரிசைப்படி ஏராளமான குடியிருப்புகள் ஒன்றன் பின் ஒன்றாக உள்ளது. இந்த தெருவின் மையப்பகுதியில் இரண்டு மூன்று மின்கம்பங்கள் சாலையின் மையப்பகுதியில் உள்ளது. இதனால், இந்த தெருவில் வசிக்கும் அனைத்து தரப்பினர்களும் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் எளிதாக செல்ல முடியாமல் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர். கடந்த பல ஆண்டுகளாக இதே நிலையில், மின்கம்பங்கள் மாற்றப்படாமல் உள்ளதால், பகுதி மக்கள் தினமும் சிரமப்பட்டு வருகின்றனர். இதனை வேறு பகுதிக்கு மாற்றித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த பகுதியினர் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளிடம் கோரிக்கை வைத்தும் இதுநாள் வரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளதாக இந்த பகுதியினர் தெரிவித்தனர். தெருவில் எளிதாக செல்ல முடியாத நிலையில், சாலையின் மையத்தில் உள்ள இந்த மின்கம்பங்களை சாலையோரம் மாற்ற தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இந்த பகுதி மக்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதியை பார்வையிட்டு தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.

Tags :
× RELATED போலீசார் இல்லாத நேரத்தில்...