. ராஜவாய்க்காலில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி விவசாயிகள் மறியல் போக்குவரத்து பாதிப்பு

க.பரமத்தி,ஆக.22: ராஜவாய்க்காலில் தண்ணீர் திறந்து விட வலியுறுத்தி பெரியதாதம்பாளையம் பகுதியில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அமராவதி ஆற்றில் தண்ணீர் வரும் காலங்களில் ஆற்று நீரை நம்பி பழைய ஆயக்கட்டு பகுதிகள், புதிய ஆயக்கட்டு பகுதிகள், நீரேற்று பாசன பகுதிகள், உள்ளாட்சி மன்றங்களின் குடிநீர் கிணறுகள் மூலம் நீரேற்றம் செய்து கொண்டிருக்கின்றன. இதில் அணைப்பாளையம் தடுப்பணை பகுதியில் இருந்து வரும் ராஜவாய்க்கால் மூலம் சுமார் 5 ஆயிரத்து 200 ஏக்கர் பாசன வசதியை பெற்று வருகின்றன. அமராவதி அணையில் இருந்து குடிநீருக்காக கடந்த நாட்களுக்கு முன்பு தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.இந்த நீர் கடந்த 18ம் தேதி சின்னதாராபுரம் பகுதிக்கு வந்தடைந்து. பிறகு அணைப்பாளையம் தடுப்பணை கடந்து கடந்த நாள்களாக செல்கிறது. இதனையறிந்த அப்பகுதி விவசாயிகள் பெரியதாதம்பாளையம் பேருந்து நிறுத்தம் பகுதியில் அமராவதி ஆற்றில் இருந்து ராஜவாய்க்காலுக்கு தண்ணீர் திறந்து விடாததை கண்டித்தும் தண்ணீர் திறந்து விட வலியுறுத்தி நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த அமராவதி வடி நில பிரிவு இளம்பொறியாளர் ராஜகோபால், க.பரமத்தி வருவாய் ஆய்வாளர் தேன்மொழி, க.பரமத்தி போலீசார் ஆகியோர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அதில் அணைப்பாளையம் தடுப்பணை பகுதியில் இருந்து ராஜவாய்க்காலில் தண்ணீர் திறந்து விட வேண்டும் தண்ணீர் கிடைத்தால் மட்டுமே கலைந்து செல்வோம் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறினர். இதனையடுத்து உயர் அதிகாரிகளிடம் தகவல் கொடுக்கப்பட்டது. உடனே அனுமதி பெற்று அணைப்பாளையம் பகுதியில் இருந்து ராஜவாய்க்காலுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதை தொடர்ந்துபோராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் இப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags :
× RELATED போலீசார் இல்லாத நேரத்தில்...