×

கரூரில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்

கரூர்,ஆக.22: தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கரூர் மாவட்ட கிளையின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் காளிதாஸ் தலைமை வகித்தார். கிருஷ்ணராயபுரம் வட்டார செயலாளர் மோகன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் ஜெயராஜ் விளக்கவுரையாற்றினார். முன்னாள் மாநிலத்தலைவர் மோசஸ் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து பேசினார். இதில், மாவட்ட துணை நிர்வாகிகள் சகிலா, சின்னுசாமி, தமிழரசி உட்பட அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.தேர்வு நிலை, சிறப்பு நிலை விண்ணப்பங்களுக்கு கல்வி சான்றிதழ்களின் உண்மைத்தன்மை வேண்டி ஆண்டுக்கணக்கில் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதன் மீது, பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் அறிவுறுத்தலின்படி உண்மைத்தன்மைக்காக காத்திராமல் உடனடியாக சிறப்பு முகாம் நடத்தி தேர்வு நிலை, சிறப்பு நிலை ஆணை வழங்கிட வேண்டும். கல்விச் சான்றிதழ்களின் உண்மைத்தன்மை, பணிவரன்முறை கேட்டு விண்ணப்பித்துள்ள விண்ணப்ப படிவங்களின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கரூர் ஒன்றியத்தில் ஆரம்பிக்கப்பட்ட தவிட்டுப்பாளையம் அங்கன்வாடி மையம் எல்கேஜி, யூகேஜி வகுப்பை, இந்த மையத்தின் என்.புகளூர் நடுநிலைப்பள்ளியில் தொடங்காமல், கிழக்கு தவிட்டுப்பாளையம் நடுநிலைப்பள்ளியில் தொடங்கப்பட்டதை சரி செய்ய வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

Tags :
× RELATED ஆத்ம நேச ஆஞ்சநேயர் கோயிலில் ராம நவமி விழா