குளித்தலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உண்ணாவிரதம்

குளித்தலை,ஆக.22: குளித்தலை அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் உண்ணாவிரதம் இருந்தனர்.
கரூர் மாவட்டம் குளித்தலை ஒன்றியக்குழு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் குளித்தலையில் புதிய நவீன பேருந்து நிலையம் அமைத்திட வேண்டும். குளித்தலை அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும். மருத்துவர்கள் செவிலியர்கள் ஊழியர்கள் ஆகியோரை அதிகப்படுத்த வேண்டும். மணப்பாறை ரயில்வேகேட் முதல் உழவர்சந்தை வரையிலான புறவழிச்சாலை மீட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். குளித்தலை மணப்பாறை ரயில்வே கேட்டில் மேம்பாலம் அமைக்க வேண்டும். குளித்தலை நகராட்சி குடிதண்ணீரைகாசுக்கு விற்காதே.கட்டண குடிநீர் விற்பனை நிலையத்தை இலவச குடிநீர் வழங்கும் நிலையமாக மாற்றி தண்ணீர் வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி குளித்தலை காந்தி சிலை அருகே உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் பிரபாகர் தலைமை வகித்தார். சசிகுமார், சிவா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி, மாநில குழு உறுப்பினர் ஜெயசீலன், விடுதலை சிறுத்தை கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் தேவேந்திரன், மாவட்ட செயலாளர் கந்தசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜு, மாவட்டக்குழு இளங்கோவன் முத்து செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED போலீசார் இல்லாத நேரத்தில்...