×

நாங்குநேரியை புறக்கணித்த அரசு பஸ் நடுவழியில் இறக்கி விடப்பட்ட தம்பதி துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க போலீஸ் பரிந்துரை

நாங்குநேரி, ஆக. 22: நாங்கு நேரியில் அரசு பஸ்சில் இருந்து நடுவழியில் தம்பதி இறக்கி விடப்பட்ட விவகாரத்தில் ஓட்டுநர், நடத்துனர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது. நெல்லை - நாகர்கோவில் மார்க்கத்தில் அரசு பஸ்கள், போக்குவரத்து விதிகளை கடைப்பிடிக்காமல் இயங்குவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன. இதனால் நாங்குநேரி, வள்ளியூர், பணகுடி, காவல்கிணறு உள்ளிட்ட பல்வேறு ஊர்களைச் சேர்ந்த பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தளபதி சமுத்திரம், வாகைக்குளம், இளந்தோப்பு உள்ளிட்ட நான்கு வழிச்சாலையில் உள்ள கிராமங்களில்  நிற்க அனுமதி இருந்தும் அரசு பஸ்கள் நிற்காமல் செல்வதாக தொடர்ந்து புகார்கள் அளிக்கப்படுகிறது.  இதனால் இப்பகுதி மக்கள், இருசக்கர வாகனங்களில் நாங்குநேரி உள்ளிட்ட சிறு நகரங்களுக்குச் சென்று கிடைத்த பஸ்சில் ஏறி வெளியூர்களுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் நாங்குநேரி அடுத்த இளந்தோப்பைச் சேர்ந்த தொழிலாளியான கணேசன் (45), மனைவி லீலாவதியுடன் கடந்த 12ம் தேதி தனது இருசக்கர வாகனத்தில் நாங்குநேரி சென்று அங்கிருந்து பஸ்சில் வள்ளியூர் சென்றார். பின்னர் பிற்பகலில் நாங்குநேரிக்கு அரசு பஸ்சில் வந்துள்ளார். நாகர்கோவிலில் இருந்து வள்ளியூர், நாங்குநேரி, நெல்லை, கோவில்பட்டி வழியாக அருப்புக்கோட்டை செல்லும் சாதாரண பஸ்சில் வந்தனர்.

 அருப்புக்கோட்டையை சேர்ந்த ராமர் (43) ஓட்டுநராகவும், விருதுநகரைச் சேர்ந்த கணேசன் (49) நடத்துநராகவும் இருந்துள்ளனர். நாங்குநேரிக்கு பயணச்சீட்டு பெற்ற கணேசன் தம்பதியினரிடம் வேறு பயணிகள் இல்லாததால் பஸ் ஊருக்குள் செல்லாது எனக்கூறி பைபாசில் நடுவழியில் இறக்கி விட்டுச் சென்றுள்ளனர். சுமார் 2 கிமீ தூரம் நடந்து தம்பதியினர் வீட்டுக்கு சென்றனர். இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான கணேசன், வழித்தடம் மாறியும், நடுவழியில் இறக்கி விட்டும் சென்ற பஸ் ஓட்டுநர், நடத்துநர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நாங்குநேரி போலீசில் புகார் அளித்தார். அருப்புக்கோட்டை அரசு பஸ் பணிமனை அதிகாரிகளுக்கும் தகவல் கொடுக்கப்பட்டு ஓட்டுநர் ராமர், நடத்துநர் கணேசன் ஆகியோர் வரவழைக்கப்பட்டனர். அவர்களிடம் எஸ்ஐ சஜீவ் விசாரணை நடத்தினார்.இதையடுத்து விதிகளை மீறிய அரசு பஸ் ஊழியர்கள் மீது துறைவாரியாக நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. அரசு பஸ் ஊழியர்கள் மீது புகார் அளிக்கப்பட்டு காவல் நிலையத்தில் விசாரணை நடந்த சம்பவம், நாங்குநேரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags :
× RELATED ஆலங்குளம் பகுதியில் கொரோனா விழிப்புணர்வு