சாரல் மழையால் நீர்வரத்து வேகமாக நிரம்புகிறது பரிவிரிசூரியன் குளம் பணகுடி, ஆக. 22: பணகுடி அருகே உள்ள பரிவிரி

சூரியன் குளம் வேகமாக நிரம்பி வருவதால், இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.பணகுடி அருகே உள்ளது பரிவிரிசூரியன்குளம். 60 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த குளம், கடந்த சில வாரங்களுக்கு முன்புவரை தண்ணீரின்றி வறண்டு காணப்பட்டது. இந்நிலையில் ஆகஸ்ட் முதல் வாரத்தில், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக அனுமன் நதியில் பெருக்கெடுத்த தண்ணீர், குளத்துக்கு வரத்துவங்கியது. இதனால் பரிவிரி

சூரியன் குளம் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. தற்போது 75 சதவீதம் தண்ணீர் நிரம்பி கடல்போல் காட்சியளிக்கிறது. தொடர்ந்து நீர்வரத்து உள்ளதால் வேகமாக நிரம்பி வருகிறது. இதுகுறித்து பணகுடி வட்டார ஒருங்கிணைந்த விவசாய சங்க தலைவர் ஆரோக்கிய பிராங்ளின் கூறுகையில், கடந்தாண்டைவிட இந்தாண்டு மழை குறைவாகவே பெய்துள்ளது. ஆனாலும் கடந்த சில மாதங்களாக கடும் வறட்சி நிலவிய நிலையில், தற்போது இப்பகுதியில் குளங்களுக்கு பாதியளவு தண்ணீர் வந்துள்ளது. இதனால் விவசாயிகள், விவசாய பணிக்காக ஆயத்த வேலைகளை தொடங்கி உள்ளனர். குளங்களுக்கு தண்ணீர் வந்தாலும், கிணறுகளில் நீரூற்று ஏற்படவில்லை.

தற்போது வரை கிணற்று பாசனத்தில் 2 மணி நேரமே தண்ணீர் பாய்ச்சும் நிலை உள்ளது. இந்த தண்ணீரை நம்பி விவசாயிகள் முழுவதும் பணியில் ஈடுபடாவி ட்டாலும், இயற்கை விவசாய பணிக்காக சக்கை பூண்டு செடிகளை உரமாக பயன்படுத்த சிலர் பயிரிட்டு உள்ளனர். அடுத்து வரும் பருவமழையை பொருத்தே முழுவதுமாக விவசாயிகள் முழுவீச்சில் விவசாய பணிகளை தொடங்குவர், என்றார்.இந்த மழைக்கு முன்பாக நீர்வரத்து கால்வாய்களை சரிசெய்திருந்தால் காட்டுப்பகுதியிலும், குடியிருப்பு பகுதியிலும் வீணாக ஓடிய மழைநீர் குளங்களுக்கு வந்து நிரம்பியிருக்கும் என இப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர்.

Related Stories: