நெல்லை மாவட்டத்தில் இன்று முதல் முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம்

நெல்லை, ஆக. 22:  நெல்லை மாவட்டத்தில் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் மூலம் நேரடியாக சென்று மனுக்கள் பெறும் பணி இன்று முதல் தொடங்குகிறது.இதுகுறித்து கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தாலுகாக்களிலும் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் எனும் புதிய திட்டத்தை தமிழக முதல்வர் செயல்படுத்த உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம பஞ்சாயத்துகள் மற்றும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் உள்ள அனைத்து வார்டுகள் அளவிலும், வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித் துறை, நகர்ப்புற வளர்ச்சி துறை மற்றும் பிற துறைகளைச் சார்ந்த ஒரு அலுவலர் குழு நேரடியாக சென்று மனுக்களை பெறும் பணி இன்று (22ம் தேதி) முதல் துவக்கப்பட உள்ளது.

இத்திட்டத்தின் கீழ் பொதுமக்கள் அடிப்படை வசதிகள், சாலை, தெரு விளக்கு, மருத்துவம் மற்றும் சுகாதாரம், குடிநீர், தனிநபர் கழிப்பிடம் வசதிகள், பசுமை வீடு கோருதல், வருவாய் துறையின் மூலம் வழங்கப்படும் சான்றுகள் மற்றும் பிற கோரிக்கைகள் இதர கோரிக்கைகள் குறித்து மனுக்கள் அளிக்கலாம்.இதற்காக கிராமம் தோறும் மனுக்கள் பெற உள்ள இடம், நாள் மற்றும் நேரம் ஆகியவற்றை கலெக்டர் அலுவலகம், ஆர்டிஓ அலுவலகம், தாலுகா அலுவலகம், மாநகராட்சி அலுவலகம் அனைத்து நகராட்சி அலுவலகங்கள், வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் அனைத்து கிராம நிர்வாக அலுவலகங்களில் அறிந்து கொள்ளலாம்.எனவே, பொதுமக்கள் இந்த வாய்ப்யை பயன்படுத்தி தங்களது கோரிக்கைகளை மனுவாக கொடுத்து பயன் பெறலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED டீக்கடையில் பெண்ணிடம் ரூ.1.50 லட்சம் செயின் பறிப்பு