தண்ணீர் வரத்து குறைந்தாலும் களக்காடு தலையணையில் குவியும் சுற்றுலா பயணிகள்

களக்காடு, ஆக. 22:   களக்காடு வனப்பகுதியில் மழை பெய்யாததால் தலையணையில் தண்ணீர் வரத்து குறைந்துள்ளது.  இருப்பினும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்த வண்ணம் உள்ளது.களக்காடு  புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மேற்குத் தொடர்ச்சி மலையில் தலையணை அமைந்துள்ளது.  வனத்துறையினரால் சுற்றுச்சூழல் சுற்றுலா மையமாக அறிவிக்கப்பட்டுள்ள  தலையணையில் ஓடும் தண்ணீரில் குளுமை அதிகம். அதேபோல் மூலிகைகளை தழுவியபடி  ஓடுவதால் நீரில் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. இதனால் தலையணையில் குளிக்க  சுற்றுலா பயணிகள் அதீத ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கடந்த சில  வாரங்களுக்கு முன் பெய்த மழையால் தலையணையில் தண்ணீர் வரத்து அதிகரித்தது.  தடுப்பணையை தாண்டி தண்ணீர் கொட்டியது. இதையடுத்து சுற்றுலா பயணிகளும்  குவியத் தொடங்கினர். இதனிடையே கடந்த ஒரு வாரமாக களக்காடு மேற்குத் தொடர்ச்சி  மலையில் மழை பெய்யவில்லை. இதனால் தலையணையில் தண்ணீர் வரத்து குறைந்து வருகிறது. எனினும்  சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது. உள்ளூர் மட்டுமின்றி  வெளியூர்களில் இருந்தும் ஏராளமானோர் கார்களில் குடும்பத்தினருடன் வந்து  செல்கின்றனர். நேற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் அதிகளவில்  குவிந்திருந்தனர். களக்காடு வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

குரங்கு கையில் செல்போன்நேற்று  தலையணைக்கு வந்த சுற்றுலா பயணி ஒருவர், செல்போனை பாறையில் வைத்துவிட்டு  குளித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு திடீரென வந்த குரங்கு செல்போனை எடுத்துக்  கொண்டு மரத்திற்கு சென்று விட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் எவ்வளவோ  முயற்சி செய்தும் குரங்கிடம் இருந்து செல்போனை மீட்க முடியவில்லை. நீண்ட நேரம் கழித்து குரங்கு மர உச்சியில் இருந்து செல்போனை கீழே போட்டதால்  செல்போன் உடைந்து சிதறியது.

Related Stories: