உடன்குடியில் மின் முறைகேடு: ரூ.32 ஆயிரம் அபராதம் வசூல்

உடன்குடி,ஆக.22: உடன்குடியில் முறைகேடாக மின்சாரம் பயன்படுத்தியதாக எழுந்த புகாரின் பேரில் மின்வாரிய அதிகாரிகள் நடத்திய அதிரடி ஆய்வில் 7மின்இணைப்புகளின் முறைகேடு செய்திருப்பது கண்டறியப்பட்டு ரூ.32ஆயிரத்து 500  அபராதம் விதிக்கப்பட்டது. தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், திருச்செந்தூர் கோட்டத்தின் சார்பில் உடன்குடி உபகோட்டத்திற்குட்பட்ட உடன்குடி நகர் விநியோகப்பிரிவில் மாதாந்திர கூட்டுக்குழு ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் 7மின்னிணைப்புகளில் மின்சாரம் தவறான முறையில் வருவாய் இழப்பு ஏற்படும் வகையில் பயன்படுத்தியது கண்டறியப்பட்டு மொத்த இழப்பீட்டுத் தொகையாக ரூ.32ஆயிரத்து552 வசூல் செய்யப்பட்டது. மேலும் வீட்டு உபயோகத்திற்காக வழங்கப்பட்ட மின்னிணைப்புகளில் இருந்து மின்சாரம் எடுத்து வணிக உபயோகம், வீடு கட்டுமானம் மற்றும் வியாபாரம் உள்ளிட்ட பணிகளுக்கு பயன்படுத்தக் கூடாது எனவும், மேலும் புதிதாக கட்டப்படும் வீடு மற்றும் கடைகளின் பணிக்கு தேவைப்படும் மின்சாரத்திற்கு சம்பந்தப்பட்ட பிரிவு அலுவலகத்தில் விண்ணப்பித்து உரிய மின்னிணைப்பு பெறப்பட வேண்டும், விவசாய மின்னிணைப்பையோ, வீட்டு மின்னிணைப்பையோ பயன்படுத்தி அதிலுள்ள கிணறு, மற்றும் ஆழ்துளை கிணற்றிலுள்ள நீரை தொழிற்சாலைகள் மற்றும் கடைகளுக்கு விற்பனை செய்யக்கூடாது. அவ்வாறு விதிமீறல் ஏற்படின் மின்திருட்டுக்கான அபராதம் வசூலிக்கப்படும் என திருச்செந்தூர் மின்சார விநியோக பொறியாளர் பிரபாகர் கூறியுள்ளார்.


Tags :
× RELATED ஓய்வு பெற்ற அரசு கருவூலக ஊழியர் மீது சரமாரி தாக்குதல்