சோலைமலையான்பட்டி பள்ளியில் நூலகம் திறப்பு

விளாத்திகுளம், ஆக.22: தமிழகம் முழுவதும் மாணவர்கள் குறைவாக உள்ள 46 பள்ளிகளில் மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் வாசிப்புத்திறன் மற்றும் கல்வியறிவை மேம்படுத்தும் விதமாக நூலகமாக மாற்ற தமிழக அரசு முடிவு செய்தது. இதில் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சோலைமலையான்பட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடத்தில் செயல்படும் நூலகத்தை மாவட்ட நூலக அலுவலர் ராம்சங்கர் திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். மாவட்ட நூலக கண்காணிப்பாளர் பிரேமநாயகம், மாவட்ட மைய நூலகர் சங்கரன், விளாத்திகுளம் கிளை நூலக நூலகர் சுமித்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 விழாவில் நூலகர்கள் தேவகி, சுமதி, நூலக பணியாளர்கள் ராஜி, தமிழ்செல்வி மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை விளாத்திகுளம் நூலக பணியாளர்கள் செய்திருந்தனர்.
 விளாத்திகுளம் முழுநேர வட்டார நூலகத்தின் கீழ் செயல்பட உள்ள இந்த நூலகத்தில் முதல் கட்டமாக 500 புத்தகங்கள், தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்கள் தலா ஒன்றும் வழங்கப்படும். சுழற்சி முறையில் மாதம் புதிய புத்தகங்கள் வழங்கப்படும். பள்ளி நாட்களில் காலை 9 மணிமுதல் மாலை 4 மணி வரை செயல்படும்.


Tags :
× RELATED தூத்துக்குடி சிலோன்காலனியில் வசிப்போர் பெயரிலேயே மனைப்பட்டா