ஆள் கடத்தல், பாலியல் குற்றங்களை தடுக்க குழு அமைப்பு

தூத்துக்குடி, ஆக.22: மனித கடத்தல், பாலியல் குற்றங்களை தடுப்பதற்காக பல்வேறு துறை சார்ந்தவர்களை உறுப்பினர்களாக கொண்ட ஒன் ஸ்டாப் கிரைசிஸ் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தூத்துக்குடி மாவட்ட நீதிபதி சுரேஷ்விஸ்வநாதன் தெரிவித்தார்.  தூத்துக்குடி மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு மற்றும் சர்வதேச நீதி குழுமம் சார்பில் தூத்துக்குடி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மனித கடத்தல் தடுப்பு குறித்து பயிற்சி முகாம் நடந்தது. மாவட்ட நீதிபதி சுரேஷ் விஸ்வநாதன் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், எஸ்.பி. அருண்பாலகோபாலன், சப்-கலெக்டர் சிம்ரான் ஜித்சிங் கலோன், மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு செயலரும், சார்பு நீதிபதியுமான சாமுவேல் பெஞ்சமின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில், ஆள் கடத்தல் தடுப்பு குறித்து விழிப்புணர்வு குறும்படம் திரையிடப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி மற்றும் விழிப்புணர்வு கையேடு வெளியிடப்பட்டது. இதில் காவல்துறை அதிகாரிகள், அரசு துறை அதிகாரிகள், நீதிமன்ற பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertising
Advertising

மாவட்ட நீதிபதி சுரேஷ் விஸ்வநாதன் பேசுகையில், தேசிய சட்ட பணிகள் ஆணைக்குழு அறிவுறுத்தல் படியும், மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு வழிகாட்டுதலின்படி மனித கடத்தல், மனித சுரண்டல் கொத்தடிமைத்தனம், பாலியல் குற்றங்கள் ஆகியவற்றிற்கு எதிராக ஒன் ஸ்டாப் கிரைசிஸ் குழு அமைக்கப்பட்டு உள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் பாலியல் தொழிலுக்கு தள்ளப்படுவது மனிதனை வியாபார நோக்கத்தோடு கடத்தி பரிமாற்றம் செய்யப்படுவதை தடுப்பதற்காக இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது.  மேலும், கொத்தடிமை தொழிலாளர்கள், பாலியல் தொழிலுக்கு வலுக்கட்டாயமாக தள்ளப்பட்டவர்கள், உடல் உறுப்பு திருட்டு ஆகியவற்றில் தடுப்பதற்காக இந்த குழு செயல்படும்.

இந்த குழுவில் நீதித்துறை, காவல்துறை, சமூக ஆர்வலர், மற்றும் தொழிலாளர் துறை, வருவாய்த் துறை அலுவலர் உள்பட 9 பேர் உறுப்பினர்களாக இருப்பர். இவர்கள், எங்கெங்கு மனித கடத்தல், மனிதர் சுரண்டல், கொத்தடிமைத் தனம், பாலியல் துன்புறுத்தல் நடைபெறுகிறதோ அந்த இடங்களுக்கு நேரடியாகச் சென்று பாதிக்கப்பட்டவர்களை மீட்டு அவர்களுக்கு மறுவாழ்வு அளித்திடும் நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள்’ என்றார்.

Related Stories: