விவசாய குளத்துக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிப்பு

சின்னசேலம், ஆக. 22: விவசாய பயன்பாட்டிற்கு சொந்தமான குளத்தை ஆக்கிரமித்து பயிரிடப்பட்டிருந்த கரும்பு, நெல், வாழை பயிர்களை வருவாய்துறையும், பேரூராட்சியும் இணைந்து பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றினார்கள்.

  சின்னசேலம் தாலுகாவிற்கு உட்பட்ட வடக்கநந்தல்(மே) பகுதியில் விவசாய பயன்பாட்டிற்கென சுமார் 4.5 ஏக்கர் பரப்பளவில் செட்டிகுளம் இருந்தது. கடந்த காலங்களில் இந்த குளத்தில் இருந்து விவசாயிகள் விவசாயத்திற்கு நீர்பாய்ச்சி வந்தனர். குளத்தில் நீர் தேங்கி நின்றதால் விவசாய கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்திருக்கும்.  இந்நிலையில் இந்த குளத்தில் சுமார் பாதி அளவில் உள்ள இடத்தை சில தனிநபர்கள் ஆக்கிரமித்து, நெல், கரும்பு, வாழை போன்ற பயிர்களை பயிர் செய்து வந்தனர். இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். இந்த ஆக்கிரமிப்பு குறித்து வடக்கநந்தல் பகுதியை சேர்ந்த பாபு என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி வழக்குப்பதிவு செய்தார். இதையடுத்து சின்னசேலம் தாசில்தார் தலைமையிலான குழுவினர் இந்த ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதற்கிடையே சின்னசேலம் தாசில்தார் இந்திரா மேற்பார்வையில் வடக்கநந்தல் பேரூராட்சி செயல் அலுவலர் செல்லப்பிள்ளை தலைமையில் துணைவட்டாட்சியர் குணசேகரன், சப் இன்ஸ்பெக்டர் குணசேகர், வருவாய் ஆய்வாளர் பத்மா ஆகியோர் முன்னிலையில் பொக்லைன் இயந்திரம் மூலம் கரும்பு, நெல், வாழை போன்ற பயிர்களை அழித்து பயிர் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. இந்த குளத்தில் ஆக்கிரமித்து பயிர் செய்திருந்த சுமார் 3 ஏக்கர் இடத்தை அதிரடியாக அகற்றினார்கள். இதில் துப்புரவு மேற்பார்வையாளர் ராஜா, கிராம நிர்வாக அலுவலர்கள் பெரியாப்பிள்ளை, வாசுதேவன், மணிமொழி, குடியரசு, பேரூராட்சி இளநிலை உதவியாளர்கள் ராமச்சந்திரன், சுகந்தி, லட்சுமணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: