புதுவை கடற்கரையில் `நிழலில்லா நாள்’ வானியல் நிகழ்வு

புதுச்சேரி, ஆக. 22:   தினமும் காலையிலும், மாலையிலும் பொருட்களின் நிழல் மிகவும் நீளமாக இருக்கும். சூரியன் உச்சிக்கு செல்ல செல்ல நிழல் சிறிதாகிக் கொண்டே வரும். சூரியன் மேற்கில் நகர ஆரம்பித்ததும் நிழல் மீண்டும் பெரிதாகிக் கொண்டே வரும். ஆனால் எல்லோரும் நினைப்பதைப் போல சூரியன் தினமும் நண்பகல் 12 மணிக்கு வானில் நேர் உச்சிக்கு வருவதில்லை. ஆண்டிற்கு 2 முறை மட்டுமே சூரியன் நம் நேர் உச்சியில் வரும். ஆக, ஒரு இடத்திலுள்ள ஒரு பொருளின் நிழலின் நீளம் ஆண்டிற்கு இருமுறை பூஜ்ஜியமாகிறது. அந்த நாளையே ‘நிழலில்லா நாள்’ என்கிறோம். இந்த வானியல்  நிகழ்வு ஏப்ரல் 21 மற்றும் ஆகஸ்ட் 21 என ஆண்டுக்கு 2 நாட்கள் மட்டுமே இருக்கும். புதுவை அறிவியல் இயக்கமும், அரசின் அறிவியல் தொழில்நுட்ப மாமன்றமும்  கல்வித்துறையுடன் இணைந்து,  நிழல் இல்லா நாள் குறித்த வானியல் நிகழ்வை  மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையிலான நிகழ்ச்சிகள் புதுவை முழுவதும் 50  இடங்களில் நேற்று நடத்தப்பட்டன. கடற்கரை காந்தி திடல் அருகே நடந்த இந்த வானியல் நிகழ்வை பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் ஆர்வமுடன் கண்டனர்.

Related Stories: