காவலர்கள் ஹெல்மெட் அணிந்து வராவிட்டால் கடும் நடவடிக்கை

புதுச்சேரி,  ஆக. 22:    புதுவை  தெற்கு காவல் சரகத்திற்குட்பட்ட காவலர்களுக்கான குறைகேட்பு கூட்டம்  அரியாங்குப்பத்தில் நேற்று நடைபெற்றது. எஸ்பி வீர.பாலகிருஷ்ணன் தலைமை  தாங்கினார். இன்ஸ்பெக்டர்கள் பாபுஜி, கவுதம் சிவகணேஷ், செந்தில்குமார்  ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் எஸ்ஐக்கள் வீரபத்திரசாமி,  புருஷோத்தமன், ராஜன், தமிழரசன், தன்வந்திரி, சிவக்குமார், சந்திரசேகரன்  ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் முதலியார்பேட்டை,  அரியாங்குப்பம், தவளகுப்பம், பாகூர், தவளகுப்பம், கிருமாம்பாக்கம் காவல்  நிலையங்களில் பணிபுரியும் காவலர்கள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.   அவர்களிடம் எஸ்பி வீர.பாலகிருஷ்ணன் குறைகளை கேட்டறிந்தார். அப்போது உயர்  அதிகாரிகளுக்கு தினமும் தெரிவிக்கும் எப்ஐஆர் தகவல்களை வாட்ஸ்அப் வழியாக  பரிமாற்றம் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும், காவலர்களின் உடல் நலத்தை பேணும்  வகையில் வருடந்தோறும் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட வேண்டும், குடும்ப  விழாக்களில் பங்கேற்க அரைநாள் விடுப்பு தர வேண்டும், பெண் காவலர்களுக்கு  தனியாக கழிவறை, ஓய்வறை ஏற்படுத்தி தர வேண்டுமென வலியுறுத்தினர். மேலும்  காவலர் சீருடை, ஷூ அலவன்ஸ் உள்ளிட்டவை குறித்தும் கேள்வி எழுப்பினர். இந்த  குறைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுப்பதாக எஸ்பி தரப்பில்  உறுதியளிக்கப்பட்டது. அதேநேரத்தில் மோட்டார் சைக்கிளில் பணிக்கு வரும் காவலர்கள் அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து வர எஸ்பி உத்தரவிட்டார்.  முதல் 2 முறை அவகாசம் அளிக்கப்பட்டு பிறகு கடுமையான நடவடிக்கை  எடுக்கப்படும் என காவலர்களை அவர் எச்சரித்துள்ளார்.

Advertising
Advertising

Related Stories: