சுற்றுச்சூழலை பாதிக்காத விநாயகர் சிலைகளை மட்டும் நிறுவ வேண்டும்

புதுச்சேரி, ஆக. 22:    விநாயகர் சதுர்த்தி வருகிற செப்.2ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதனை பாதுகாப்பாகவும், அமைதியாகவும் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ேகடு விளைவிக்காத வகையில் கொண்டாடுவது சம்பந்தமாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கலெக்டர் அருண் தலைமையில் கூட்டம் நடந்தது. இதில் சீனியர் எஸ்பி ராகுல் அல்வால், சப்-கலெக்டர்கள், எஸ்பிக்கள், நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்கள், மின்துறை செயற்பொறியாளர், இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.   இக்கூட்டத்தில், விநாயகர் சிலை அமைக்க விரும்பமுள்ளவர்கள் நகராட்சி- கொம்யூன் பஞ்சாயத்து மற்றும் காவல் துறையினரிடம் உரிய அனுமதி பெற வேண்டும். களி மண்ணால் செய்யப்பட்ட, சுடப்பட்ட ரசாயன கலப்பற்ற சிலைகள், கிழங்கு மாவு மற்றும் மரவள்ளி கிழங்கு மாவு கழிவுகளால் செய்யப்பட்ட சுற்றுச்சூழலை பாதிக்காத சிலைகளை மட்டுமே விழா குழுவினர் நிறுவ வேண்டும். நீரில் கரையும் தன்மையிலும், எந்த வகை தீங்கும் விளைவிக்காத இயற்கை வண்ணங்களை மட்டுமே விநாயகர் சிலைகளுக்கு திட்ட பயன்படுத்த வேண்டும். மேலும் இது சம்மந்தமாக புதுச்சேரி மாசு கட்டுப்பாட்டு வாரியம் மக்களுக்கு விரிவான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். விநாயகர் சிலை நிறுவும் இடங்களில் அமைக்கப்படும் கூடாரங்கள் பாதுகாப்பான எளிதில் தீப்பிடிக்காத உபகரணங்களால் மட்டுமே அமைத்திடல் வேண்டும்.

விநாயகர் சிலைகளுக்கு அலங்கார மின் விளக்குகள் மற்றும் பிற மின் உபகரணங்கள் அமைப்பதற்கு மின் கம்பங்களில் இருந்து அனுமதியின்றி மின்சாரத்தை பயன்படுத்தக் கூடாது. விநாயகர் சிலைகளுக்கு அலங்கார மின் விளக்குகள் மற்றும் பிற மின் உபகரணங்கள் அமைப்பதற்கு மின் கம்பங்களில் இருந்து அனுமதியின்றி மின்சாரத்தை பயன்படுத்தக் கூடாது. மாணவர்கள் மற்றும் முதியோர்களின் நலன் கருதி அதிகமான ஒலி எழுப்பும் ஒலிப்பான்களை விழாக்களில் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். மேலும், விழா குழுவினர் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு மேல் ஒலிப்பான்களை உபயோகிக்க கூடாது. இதனை சம்பந்தப்பட்ட எல்லைக்குட்பட்ட காவல் துறையினர் கண்காணித்து நடவடிக்கை எடுப்பார்.  விநாயகர் சிலையை கரைப்பதற்கு ஊர்வலமாக செல்ல போலீசாரால் தீர்மானிக்கப்பட்ட நேரம் மற்றும் தடத்தில் மதுபான கடைகளை மூட முடிவெடுக்கப்பட்டது. மேலும், விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் மற்றும் சிலைகளை கரைக்கும் நிகழ்ச்சி மாலை 6 மணிக்குள் முடிவடைய வேண்டும். ஊர்வலத்தின்போது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது போலீசார் கடுமையான நடவடிக்கை எடுக்கவும், ஊர்வலத்தின்போது பட்டாசுகள் கொளுத்த அனுமதி கிடையாது எனவும் முடிவு எடுக்கப்பட்டது.

Related Stories: