பாகூர் உள்ளிட்ட 4 இடங்களில் உள்விளையாட்டு அரங்கம்

புதுச்சேரி, ஆக. 22:  புதுவையில் 4 இடங்களில் ரூ. 5 கோடி மதிப்பீட்டில் உள் விளையாட்டு அரங்கம் கட்ட புரிந்துணர்வு  ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்திய  விமானப் பணிகள் ஆணையம், கல்வித்துறை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்   அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் முன்னிலையில்  நேற்று கையெழுத்தானது. இந்திய விமான  பணிகள் ஆணையத்தின் இயக்குனர் விஜயஉபாத்யாயா, கல்வித்துறை செயலர்  அன்பரசு, கல்வித்துறை இயக்குனர் ருத்ரகவுடு ஆகியோர் ஒப்பந்தங்களை  பரிமாறிக் கொண்டனர்.அதன்படி இந்திய விமானப் பணிகள் ஆணையம் சமூக  பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் முதன் முறையாக ரூ.5 கோடி வழங்கவுள்ளது. இந்த நிதியில் 12 இடங்களில் உள் விளையாட்டு அரங்கம் கட்டுவதற்கு அரசு   முடிவு செய்திருக்கிறது. அதில் முதல் கட்டமாக ரூ.5 கோடி செலவில் 4 இடங்களில் உள்  விளையாட்டு அரங்கம் அமைக்கப்படுகிறது. பாகூர், மணவெளி, டி.ஆர்.  பட்டினம், ஏனாம் ஆகிய பகுதியில் தலா ரூ. 1.25 கோடி செலவில் இந்த பல்நோக்கு  உள்விளையாட்டு அரங்கம் கட்டப்படுகிறது. இதன் மூலம் கிராம இளைஞர்கள்  விளையாட்டு திறனை மேம்படுத்தவும், பயிற்சிக்கும் ஏதுவாக அமையும். மீதம்  உள்ள விளையாட்டு அரங்கங்களும் விரைவில் கட்டப்படும். இதில் பேஸ்கட் பால்,  பேட்மிட்டன், டேபிள் டென்னிஸ் மற்றும் பல உள் விளையாட்டுகளை மாணவர்கள்  விளையாட முடியும் என அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்தார். நிகழ்ச்சியின் போது விளையாட்டு துறை துணை இயக்குனர் நரசிங்கன் மற்றும்  விளையாட்டு துறை பொறுப்பாளர் ஆனந்தன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags :
× RELATED அரசின் பங்களிப்போடு சூரிய ஒளி மூலம்...