தனியார் பள்ளிகளில் இலவச ஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவர்களிடம் பிரிவினை கூடாது

நெய்வேலி, ஆக. 22: நெய்வேலியில் உள்ள தனியார் பள்ளிகளில் இலவச கல்வி ஒதுக்கீட்டில் சேர்க்கப்பட்ட மாணவர்களை மற்ற மாணவர்களிடம் இருந்து நிர்வாகம் பிரிவினைப்படுத்தி நடத்தக்கூடாது என கல்வியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
 தமிழகத்தில் கட்டாய கல்வி சட்டம் அமல்படுத்தப்பட்ட பின் தனியார் மெட்ரிக் பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில் 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என அரசு உத்தரவிட்டது. இதில் நலிவடைந்த பிரிவினர், வாய்ப்பு மறுக்கப்பட்ட மாணவர்களுக்காக இந்த இலவச ஒதுக்கீடு உருவாக்கப்பட்டது. இவர்களுக்காக கல்விக் கட்டணத்தை அரசே வழங்கிவருகிறது. இருப்பினும் பல பள்ளிகளில் இந்த ஒதுக்கீட்டின் படி மாணவர்களை சேர்க்க முடிவதில்லை. பல்வேறு முயற்சிகளுக்கு பின் மாணவர்கள் பள்ளியில்  சேர்க்கப்பட்டாலும் அவர்களை வகுப்புகளில் தனியாக அமரவைத்தல், சிறிய தவறுக்கும், வகுப்பிற்கும் வெளியே நிற்க வைத்தல்  உள்ளிட்ட செயல்களில் தனியார் பள்ளி நிர்வாகம் ஈடுபடுவதாக புகார்கள் எழுந்து வருகிறது.

இவ்வாறு மாணவர்களை பிரிவினையாக நடத்தக்கூடாது என கல்வியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து கல்வியாளர்கள் கூறுகையில், இடஒதுக்கீடு அடிப்படையில் சேர்க்கப்பட்ட மாணவர்களை பிற மாணவர்களிடம் இருந்து வேறுபடுத்தி நடத்தகூடாது. பள்ளி கட்டணம் செலுத்துவதற்கு மாணவர்கள் எந்தவிதத்திலும் பொறுப்பாக முடியாது. அவர்களை பிரித்து பார்த்தல், தண்டித்தல் போன்றவை முறையற்ற செயல். மேலும் கல்வி கட்டணம் செலுத்தவில்லை என்பதை அனைவரின் முன்பாக தெரிவிக்கக்கூடாது. பெற்றோர்களை அச்சப்படுத்துவதற்காக  மாணவர்களை எந்தவிதத்திலும் துன்புறுத்தக்கூடாது. அவ்வாறு நடந்து கொள்ளும் பள்ளிகள்  கண்காணிக்கப்பட்டு  சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.

Tags :
× RELATED சேதமடைந்துள்ள சாலையை விரைந்து சீரமைக்க கிராம மக்கள் வலியுறுத்தல்