வெள்ளாற்றில் தடுப்பணை கட்ட வேண்டும்

சேத்தியாத்தோப்பு, ஆக. 22: கடலூர் மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க சேத்தியாத்தோப்பு நீங்கலாக 5 இடங்களுக்கு ரூ.75.71 கோடியில் தடுப்பணைகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. வெள்ளாற்றில் மழை வெள்ள காலத்தில் அனைத்து தண்ணீரும் தேக்கி வைக்க முடியாமல் வீணாக கடலில் கலந்து விடுகிறது. இதனால் கோடை காலங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. எனவே சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் தடுப்பணை கட்ட வேண்டும் என சேத்தியாத்தோப்பு சுற்று வட்டார பொதுமக்களும், சேத்தியாத்தோப்பு பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளிலும் வசிக்கும் பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்து வருகிறது. ஏற்கனவே சேத்தியாத்தோப்பு பேரூராட்சிக்கு குடிநீர் வழங்கி வரும் வெள்ளாற்றில் போடப்பட்டுள்ள இரண்டு போர்வெல் மூலம்தான் சேத்தியாத்தோப்பு பேரூராட்சிக்கு குடிநீர் பெறப்பட்டு வருகிறது. மேலும் காலை நேரத்தில் மட்டும் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது. மாலையில் குடிநீர் வழங்க முடியாத நிலை இருந்து வருகிறது. இந்நிலையில், அரசு மணல் குவாரியை திறந்து இருப்பதால், அதிகளவில் மணல் எடுக்கப்படுகிறது.

இயந்திரங்கள் மூலம் அதிக ஆழத்தில் மணல் அள்ளப்பட்டு வருவதால் குடிநீர் உப்பு நீராக மாறி நீராதாரம் விரைவில் பாதிக்கப்படும் சூழல் ஏற்படும் நிலை உள்ளது.இவ்வாறான நிலையை கருதிதான் சென்னிநத்தம், கிளாங்காடு, மேட்டுத் தெரு, புதுத்தெரு, பிள்ளையார் கோயில் தெரு, கனகரத்தினம் தெரு பொதுமக்கள் சென்னிநத்தம் பகுதி வெள்ளாற்றின் குறுக்கே தடுப்பணையை கட்டி நீரை தேக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர். தடுப்பணையை கட்டுவதன் மூலம் நிலத்தடி நீர் மட்டம் உயரும் எனவும் தெரிவிக்கின்றனர். இது குறித்து பல முறை அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் கவனத்திற்கு கொண்டு சென்றும் பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காமல் தொடர்ந்து சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் தடுப்பணை கட்டுவதை மாவட்ட நிர்வாகம் புறக்கணித்து வருவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இனியும் காலம் கடத்தாமல், மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED சாராயம் விற்ற 2 பேர் கைது