குறிஞ்சிப்பாடி பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை அமோகம்

நெய்வேலி, ஆக. 22: உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் பான்பராக், குட்கா போன்ற புகையிலை பொருட்களை விற்பனை செய்யவோ, இருப்பு வைக்கவும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. சிகரெட் உள்ளிட்ட பொருட்களை பள்ளிகள் மற்றும் கல்வி நிலையங்கள் அருகே விற்பனை செய்யவும் தடை உள்ளது. ஆனால் குறிஞ்சிப்பாடி பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து  சமூகஆர்வலர் திராவிடன் கூறுகையில், குறிஞ்சிப்பாடியில் குட்கா, பான்பராக் பொருட்கள் விற்பனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இங்கு தினமும் பொது இடங்களில் உள்ள குப்பை தொட்டிகளை பார்த்தாலே அதில் ஏராளமான குட்கா பாக்கெட்டுகள் இருப்பதை காணலாம். இது மட்டுமல்லாமல் பள்ளி, கல்லூரி மாணவர்கள், கூலித்தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களிடம் புகையிலை பொருட்களை கடையின் உரிமையாளர்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். மேலும் குறிஞ்சிப்பாடி பகுதியில் அதிக அளவில் விவசாய கூலி தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இங்கு சுகாதார அதிகாரிகள் கடைகளில் ஆய்வு மேற்கொள்வது இல்லை. இதனால் புகையிலை பொருட்கள் விற்பனை எந்த தடையுமின்றி நடைபெற்று வருகிறது என கூறினார். எனவே பொதுமக்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக கடைகளில் ஆய்வு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Tags :
× RELATED தமிழ் ஆட்சிமொழி சட்ட வாரவிழா