கட்டியங்குப்பம் கிராமத்தில் மூடி கிடக்கும் கிளை நூலகத்தை திறக்க கோரிக்கை

நெய்வேலி, ஆக. 22:   குறிஞ்சிப்பாடி ஒன்றியம் கிருஷ்ணங்குப்பம் ஊராட்சி கட்டியங்குப்பம் கிராமத்தில் சுமார் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் கிளை நூலகம் உள்ளது. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் கீழ் செயல்பட்ட இந்த நூலகத்தை கட்டியங்குப்பத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள், பட்டதாரிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், கடந்த இரண்டு வருடங்களாக இந்நூலகம் மூடிக்கிடக்கிறது. இதனால் பள்ளி மாணவ, மாணவிகள், இளைஞர்கள் என அனைவரும் சிரமப்படுகின்றனர். மேலும் பல்வேறு போட்டி தேர்வுக்கான புத்தகங்கள் படிக்க முடியாமல் பாதிக்கப்படுகின்றனர். இதனால் இவர்களில் ஒரு பகுதியினர் சுமார் பதினைந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குறிஞ்சிப்பாடி பொது நூலகத்துக்கு சென்று வருகின்றனர். இதனால் பயண தூரம் மற்றும் காலதாமதம் ஆகிறது.கிளை நூலகத்தை திறக்க கோரி கிராம மக்கள் பலமுறை புகார் கூறியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறுகின்றனர். எனவே பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் நலன் கருதி கிராமத்தில் உள்ள கிளை நூலகத்தை உடனடியாக  திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

Tags :
× RELATED தமிழ் ஆட்சிமொழி சட்ட வாரவிழா