×

திருவண்ணாமலை தேனிமலையில் நில ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு ஆர்டிஓ பேச்சுவார்த்தை

திருவண்ணாமலை, ஆக.22: திருவண்ணாமலை தேனிமலை பகுதியில் தனியார் நிலத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களிடம் ஆர்டிஓ தேவி பேச்சுவார்த்தை நடத்தினார்.திருவண்ணாமலை- தண்டராம்பட்டு சாலையில் உள்ள தேனிமலை பகுதியில் தனியாருக்கு சொந்தமான 1.5 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை தேனிமலை, அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள், பல ஆண்டுகளாக சுடுகாடாக பயன்படுத்தி வந்தனர். ஆனால், ஒருபிரிவினர் தங்களுக்கு சொந்தமான இடத்தை சுடுகாடாக பயன்படுத்துவற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், மனுதாரர்களுக்கு அந்த இடத்தை அளந்து கொடுக்குமாறு வருவாய்த்துறையினருக்கு உத்தரவிட்டது. அதன்பேரில், கடந்த ஆண்டு மே 11ம் தேதி வருவாய்த்துறையினர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன், தேனிமலையில் நிலத்தில் இருந்த புதர்களை அகற்றி, அளக்க முற்பட்டனர். அப்போது, அப்பகுதியை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் நிலத்தை அளக்க விடாமல் மறியலில் ஈடுபட்டனர். நீதிமன்ற உத்தரவுப்படி ஆக்கிரமிப்பு அகற்றப்படுவதாக அதிகாரிகள் கூறியதையடுத்து மறியல் கைவிடப்பட்டது. பின்னர், அதிகாரிகளும் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் சென்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று அந்த இடத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை ஜேசிபி மூலம் அகற்ற போலீஸ் பாதுகாப்புடன் வருவாய்த்துறையினர் வந்தனர். தகவலறிந்த ஒரு பிரிவினர், நிலத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்த ஆர்டிஓ தேவி, டிஎஸ்பி அண்ணாதுரை, தாசில்தார் அமுலு ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அப்போது, ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்தவர்களிடம் ஆர்டிஓ பேச்சுவார்த்தை நடத்தினார். நீதிமன்ற உத்தரவுப்படி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதாகவும், அதனை தடுக்கக்கூடாது எனவும் ஆர்டிஓ எச்சரித்தார். இதையடுத்து, எதிர்ப்பு தெரிவித்தவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர், அங்கிருந்த ஆக்கிரமிப்புகள் ஜேசிபி மூலம் அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.

Tags :
× RELATED இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான...