தமிழகம் முழுவதும் மாவட்டந்தோறும்ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் அச்சிட 35 இயந்திரங்கள் வருகை விரைவாக நடைமுறைக்கு வர கோரிக்கை

வேலூர், ஆக,22:ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் அச்சிடும் பணிக்காக 35 இயந்திரங்கள் அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விரைவாக இவற்றை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.தமிழகத்தில் பொது வினியோக திட்டத்தில் பொருட்கள் பெறும் வகையில் ஏற்கனவே இருந்த ரேஷன் கார்டுகளை மாற்றி புதிய வடிவில் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் கடந்த 2017ம் ஆண்டு முதல் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதுவரை 2.03 கோடி குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் புதிதாக ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் கேட்டு விண்ணப்பிப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதற்காக தமிழக அரசு சார்பில் உணவு பொருள் வழங்கல் துறையின் இணைய தளத்தில் www.tnpds.gov.in விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பித்து 2 மாதங்கள் முதல் 4 மாதங்களுக்குள் ரேஷன் கார்டுகள் அச்சிட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.இவை அனைத்தும் சென்னையில் மட்டுமே அச்சிட்டு பிற மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் அந்தந்த மாவட்டங்களில் அச்சிடுவதற்கான இயந்திரங்கள் அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Advertising
Advertising

இதுகுறித்து உணவு பொருள் வழங்கல் அதிகாரிகள் கூறியதாவது:மிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் புதிதாக ஸ்மார்ட் கார்டுகள் அச்சிட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. அதன் பிறகு மக்களவை மற்றும் சட்டப்பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தல் நடந்ததால் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டது. புதிதாக விண்ணப்பிக்கப்பட்ட மனுக்களும் அப்படியே தாலுகா அலுவலகங்களில் நிலுவையில் இருந்தது. இந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது.அதன்படி, தற்போது மாநிலம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு குறிப்பிட்ட ஸ்மார்ட் கார்டுகள் அச்சிட்டு வழங்கப்பட்டுள்ளது. அந்த கார்டுகளை மாவட்ட வழங்கல் அலுவலர் மூலமாக அந்தந்த வட்ட வழங்கல் அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. நிலுவையில் உள்ள மனுக்கள் மீதும் விசாரணை நடத்தி விரைவாக அவர்களுக்கு கார்டுகள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.இந்த கார்டுகள் அனைத்தும் சென்னையில் மட்டுமே அச்சிட்டு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு முறையும் சென்னை உணவு பொருள் வழங்கல் ஆணையர் ஒப்புதலுக்கு பிறகே புதிய ஸ்மார்ட் கார்டு அச்சிடப்படுகிறது. இதனால் காலதாமதம் ஏற்படுகிறது. இதை தடுக்கும் வகையிலும், பொதுமக்களுக்கு உடனுக்குடன் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கவும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.அதன்படி, மாநிலம் முழுவதும் 31 மாவட்டங்களுக்கு தலா ஒரு இயந்திரமும், சென்னைக்கு மட்டும் 4 இயந்திரங்கள் கொள்முதல் செய்து அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரங்கள் மூலம் விரைவாக ஸ்மார்ட் கார்டுகள் அந்தந்த கலெக்டர்களின் ஒப்புதலுடன் அச்சிடப்படும். திருத்தங்களும் உடனுடன் மேற்கொள்ளப்படும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த இயந்திரங்கள் விரைவில் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும்.

Related Stories: