வேலூர் மாவட்ட பிரிப்பால் ஏற்பட்ட குளறுபடி சட்டமன்ற தொகுதி மாறிய பகுதிகளை ஒருங்கிணைப்பது எப்படி? அதிகாரிகள் ஆலோசனை

வேலூர், ஆக.22:புதிதாக பிரிக்கப்படும் மாவட்டங்களுக்குள் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகள் மாறியுள்ளதால் அந்த பகுதிகளை சீரமைப்பது தொடர்பாக அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.வேலூர் மாவட்டம் நிர்வாக வசதிக்காக 3 ஆக பிரிக்கப்பட்டுள்ளது. அதாவது வேலூரை தலைமையிடமாக கொண்டு வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் நகரங்களை தலைமையிடமாக கொண்டு 2 மாவட்டங்கள் என பிரிக்கப்பட்டுள்ளது. மேலும் கே.வி.குப்பத்தை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகாவும் உருவாக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், புதிய மாவட்டங்களை பிரிப்பது தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்புக்கூட்டம் வரும் 29ம் மற்றும் 30ம் தேதிகளில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 3 இடங்களில் நடக்கிறது. இதில் தமிழக வருவாய்த்துறை ஆணையர் கலந்து கொள்கிறார். இதில் எம்எல்ஏக்கள், எம்பிக்கள், முன்னாள் மக்கள் பிரதிநிதிகள், வணிகர்கள் உட்பட பொதுமக்கள் கலந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையில் புதிதாக பிரிக்கப்படும் மாவட்டங்களுக்குள் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகள் மாறி, மாறி அமைந்துள்ளதால், அந்த பகுதியை ஒருங்கிணைப்பது தொடர்பாக அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் கூறியதாவது:வேலூர் மாவட்டம் தற்போது 3 ஆக பிரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மூன்றாக பிரிக்கப்படும் மாவட்டங்களில் ராணிப்பேட்டை மாவட்டத்துக்குள் வரும் ஆற்காடு சட்டமன்ற தொகுதிக்குள் வேலூர் மாவட்டத்தில் வேலூர் தாலுகாவுக்கு உட்பட்ட கணியம்பாடி ஒன்றியம் வருகிறது.ஆனால் மாவட்டமாக பிரித்தால் கணியம்பாடி ஒன்றியம் ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு உட்பட ஆற்காடு சட்டமன்ற தொகுதிக்கு உரியது. தாலுகாவாக பிரித்தால் அது வேலூர் மாவட்டத்தில் வரும். இதனால் குழப்பம் ஏற்படும். ஒரு சட்டமன்ற தொகுதி என்பது ஒரே மாவட்டத்துக்குள் இருக்க வேண்டும் என்பது விதி. வேறு மாவட்டத்துக்குள் அதன் எல்லை இருக்கக்கூடாது.அதேபோல் மாதனூர் அருகே உள்ள சில கிராமங்கள் அணைக்கட்டு தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியாக உள்ளது. ஆனால் தொகுதி ஆம்பூர் சட்டமன்ற தொகுதியாக உள்ளது. மேலும், இதே ஆம்பூர் சட்டமன்ற தொகுதிக்குள் பேரணாம்பட்டு ஒன்றியத்தின் சில கிராமங்கள் வருகின்றன. இதுபோன்ற இடங்கள் குறித்து கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கான ஆலோசனையிலும் அரசு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.இந்த பகுதிகளை எந்த சட்டமன்ற தொகுதியுடன் இணைப்பது? என்று தெரியவில்லை. இதனால் வருவாய் ஆணையர் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்துவதற்கு முன்பே அனைத்தையும் தயார் செய்து வருகிறோம். இறுதி முடிவை அவர் எடுப்பார். பொதுமக்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: