ஜோலார்பேட்டையில் தொடர் மழை ஏலகிரி மலையில் மண்சரிந்து சாலையில் விழும் பாறைகள் வாகன ஓட்டிகள் அச்சம்

ஜோலார்பேட்டை, ஆக. 22: ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரிமலையில் அடிக்கடி மண் சரிவு ஏற்பட்டு பாறைகள் சாலையில் உருண்டு விழுவதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரிமலை சுற்றுலா தலமாக உள்ளது. இங்கு தினமும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். சில நாட்களுக்கு முன்பு பெய்த தொடர் கனமழை காரணமாக மலைகளில் ஆங்காங்கே மண் சரிவு ஏற்பட்டுள்ளது.கடந்த 19ம் தேதி மலைப் பாதையின் 2வது வளைவில் ஒரு பெரிய பாறாங்கல் உருண்டு சாலையின் நடுவே விழுந்தது. தகவலறிந்த நெடுஞ்சாலைத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பாறாங்கல்லை அகற்றினர்.இதேபோல் நேற்று முன்தினம் மலைப்பாதையில் 9 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு சாலைகளில் பாறாங்கற்கள் உருண்டு விழுந்தது. அப்போது, அவ்வழியாக பொதுமக்கள் யாரும் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இருப்பினும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த திருப்பத்தூர் நெடுஞ்சாலைத்துறை அதிகாரி திருலோகசுந்தரம் தலைமையில் ஊழியர்கள் சம்பவ இடங்களுக்கு சென்று சாலையில் விழுந்த கற்களை அகற்றினர். பின்னர், போக்குவரத்து சீரானது.கனமழை காரணமாக மலைப் பகுதி ஈரப்பதத்துடன் உள்ளது. இதனால் சரிவான இடங்களில் பாறைகள் பெயர்ந்து சாலையில் விழும் அபாயம் உள்ளது. எனவே வாகன ஓட்டிகள் கவனத்துடன் சென்றுவர வேண்டும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Related Stories: