×

வேலூரில் சாலையோரம் நின்றுகொண்டிருந்த கன்டெய்னர் லாரியை கடத்திய வழிப்பறி கும்பல் ஜிபிஎஸ் கருவி மூலம் குற்றவாளிகள் சிக்கினர்

வேலூர், ஆக.22:வேலூரில் சாலையோரம் நின்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரியை கடத்திச் சென்ற கும்பலை ஜிபிஎஸ் கருவி மூலம் போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.சென்னையை சேர்ந்த வெங்கடேஷ் என்பவருக்கு சொந்தமான கன்டெய்னர் லாரி நேற்று முன்தினம் இரவு சென்னை துறைமுகத்திலிருந்து ₹11 லட்சம் மதிப்பிலான வாகன உதிரிபாகங்களை ஏற்றிக் கொண்டு சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வழியாக ஓசூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை துரை என்பவர் ஓட்டி வந்தார்.வேலூர் மாவட்டம் வேலூர் அடுத்த பூட்டுத்தாக்கு பகுதியில் டிரைவர் துரை, கன்டெய்னர் லாரியை சாலையோரம் நிறுத்திவிட்டு அருகில் இருந்த ஓட்டலில் சாப்பிட சென்றார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது நிறுத்தியிருந்த கன்டெய்னர் லாரியை காணாமல் டிரைவர் துரை அதிர்ச்சியடைந்தார். சுற்றுப்புற பகுதிகளில் தேடிப்பார்த்தும் லாரியை காணவில்லை. யாராவது லாரியை சரக்குடன் கடத்தி சென்றிருக்கலாம் என்று கருதிய அவர், அதுப்பற்றி உரிமையாளர் வெங்கடேஷுக்கு தகவல் தெரிவித்தார்.

பின்னர் காரில் இருந்த ஜிபிஎஸ் கருவி மூலம் லாரி எங்கே சென்று கொண்டிருக்கிறது என வெங்கடேஷ் கண்காணித்து வந்தார். இதுதொடர்பாக ரத்தினகிரி போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார். போலீசாரின் உதவி மூலம் தொடர்ந்து லாரி எங்கே செல்கிறது என கண்காணிக்கப்பட்டது. அப்போது பள்ளிகொண்டா டோல்கேட் அருகே லாரி சென்று கொண்டிருந்தது தெரிய வந்தது.இதையடுத்து அங்கு விரைந்து சென்ற விரிஞ்சிபுரம் போலீசார் கடத்தி செல்லப்பட்ட லாரியை மடக்கி பிடித்தனர். போலீசாரை பார்த்ததும் லாரியை ஓட்டி சென்ற ஆசாமி உட்பட 5 பேரும் தப்பி ஓட முயன்றனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் வேலூர் சேண்பாக்கத்தை சேர்ந்த அசோக்குமார்(22), லோகேஷ்(22), ராகேஷ்குமார்(22), அன்பு(22), பார்த்திபன்(22) ஆகிய 5 பேர் என்பது தெரிய வந்தது. இந்த கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான வேளாண்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற யாசீம் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை செய்ததில் அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் ஒரு கார், 4 ஆட்டோக்கள், 3 இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலூரை சேர்ந்த சிவா என்பவரை கலவை கூட்ரோடு தனியார் கல்லூரி அருகே தாக்கிவிட்டு அவர் ஓட்டிச் சென்ற காரை இந்த கும்பல் கடத்திச் சென்றதும் தெரியவந்தது. மேலும் மேற்கண்ட கும்பல் இரவு நேரங்களில் தனியாக பைக்கில் வருபவர்களை தாக்கி பைக்குகளை பறித்து செல்வதும், டிரைவர்கள் அயர்ந்த நேரத்தை அறிந்து அவர்கள் ஓட்டி வரும் வாகனங்களை திருடிச் செல்வதும் விசாரணையில் தெரிய வந்தது. மேலும் இவர்களிடம் நடத்தப்படும் விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

Tags :
× RELATED குடும்ப பிரச்னையால் பெண்...