×

வேளாண் விற்பனை குழு சோதனையில் சந்தை கட்டணம் செலுத்தாமல் முந்திரி பருப்பு ஏற்றி சென்ற லாரி பறிமுதல் அபராத ெதாகையுடன் ₹50,235 வசூல்

நாகர்கோவில், ஆக.22 : குமரி வேளாண் விற்பனை குழுவுக்கு சந்தை கட்டணம் செலுத்தாமல், முந்திரி பருப்பு ஏற்றி சென்ற லாரி பறிமுதல் செய்யப்பட்டு, அபராத ெதாகையுடன் சேர்த்து ₹50,235 வசூலிக்கப்பட்டது. கன்னியாகுமரி விற்பனை குழு செயலாளர் விஷ்ணப்பன் உத்தரவின் பேரில், மூத்த விற்பனை கூட கண்காணிப்பாளர் கண்ணன் தலைமையில் கண்காணிப்பாளர்கள் ராஜசேகரன்,  கேப்டன் வளன், மேற்பார்வையாளர் சிதம்பரம் மற்றும் விற்பனை குழு அலுவலர்கள் கொண்ட குழுவினர் குழித்துறையில் வாகன தணிக்கையில் இருந்தனர். அப்போது அந்த வழியாக முந்திரி பருப்பு ஏற்றி வந்த கேரள பதிவு எண் கொண்ட லாரி ஒன்றில் சோதனை நடத்தினர். இதில் ரூ.49 லட்சத்து 23 ஆயிரத்து 503 மதிப்பிலான முந்திரி பருப்பு, திருவிதாங்கோட்டில் உள்ள ஒரு நிறுவனத்திடம் இருந்து, கொல்லத்தில் உள்ள ஒரு நிறுவனத்துக்கு விற்பனை செய்யப்பட்டு  எடுத்து செல்லப்படுவது தெரிய வந்தது. தொடர்ந்து நடந்த விசாரணையில் கன்னியாகுமரி விற்பனை குழுவுக்கு சந்தை கட்டணம் செலுத்தி அனுமதி சீட்டு பெறாமல் கொண்டு சென்றதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் லாரியை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து சந்தை கட்டணம் (அபராத தொகையுடன்) ரூ.50ஆயிரத்து 235 நிறுவன உரிமையாளர் செலுத்தினார்.இதையடுத்து லாரி விடுவிக்கப்பட்டது. மேலும் தேங்காய் விளைபொருள் ஏற்றி வந்த வாகனம் ஒன்றில் நடந்த சோதனையில், சந்தை கட்டணம் மற்றும் அபராதம் என மொத்தம் ரூ.4,500 வசூலிக்கப்பட்டது.

இது பற்றி விற்பனை குழுவின் செயலாளர் விஷ்ணப்பன் கூறுகையில், தமிழ்நாடு வேளாண் விளை பொருள் விற்பனை (ஒழுங்குப்படுத்துதல்) சட்டம் மற்றும் விதிகளின் படி குமரி மாவட்டத்தில் அறிவிக்கையிடப்பட்ட விளை பொருட்களாக நெல், வேர்க்கடலை, புளி, தேங்காய், ரப்பர், முந்திரி, மரச்சீனி ஆகியவை உள்ளன. எனவே மேற்கண்ட விளை பொருட்கள் விற்பனை செய்யப்படும் போது கன்னியாகுமரி விற்பனை குழுவுக்கு விளை பொருளின் மதிப்பு 1 சதவீதம் சந்தை கட்டணம் செலுத்தி அனுமதி சீட்டு பெற வேண்டும். அனுமதி சீட்டு பெறாமல், செல்லும் வாகனங்கள் கண்டறியப்பட்டால் சந்தை கட்டணம் மற்றும் அபராதம் செலுத்த வேண்டி வரும். அவ்வாறு தவறும் பட்சத்தில் நீதிமன்றம் மூலமாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே மேற்கண்ட பொருட்களை வாணிபம் செய்யும் வணிகர்கள் விற்பனை குழுவின் உரிமம் பெற்று மாதாந்திர அறிக்கைகள் ஒவ்வொரு மாதமும் 10ம் தேதிக்குள் சமர்ப்பித்து, சந்தை கட்டணம் செலுத்தி வாணிபம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கன்னியாகுமரி விற்பனை குழுவின் உரிமம் இல்லாமல் மேற்கண்ட பொருட்களை வியாபாரம் செய்யும் வணிகர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.




Tags :
× RELATED ‘வைப்புநிதி உங்கள் அருகில்’ விழிப்புணர்வு நிகழ்ச்சி