ஏழு மாதமாக சம்பளம் வழங்காததை கண்டித்து பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியர்கள் ஆக.28ல் குடும்பத்துடன் தர்ணா சங்க நிர்வாகிகள் பேட்டி

நாகர்கோவில், ஆக.22: ஏழு மாதமாக சம்பளம் வழங்கப்படாததை கண்டித்து பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியர்கள் குடும்பத்துடன் ஆகஸ்ட் 28ம் தேதி கலெக்டர் அலுவலகம் முன்பு மாலை நேர தர்ணா போராட்டம் நடத்த உள்ளனர். தமிழ்நாடு தொலைதொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் செல்வம், மாவட்ட தலைவர் சுயம்புலிங்கம், பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஜார்ஜ், செயலாளர் ராஜூ ஆகியோர் நாகர்கோவிலில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:இந்திய நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று பிஎஸ்என்எல். தரைவழி மற்றும் மொபைல் மூலமாக தொலைதொடர்பு சேவை, இணைவழி சேவை ஆகியவற்றை வழங்கி வருகிறது. 3 லட்சம் பேர் பணிபுரிந்த நிறுவனத்தில் தற்போது 1.15 லட்சம் பேர் நிரந்தர ஊழியர்களாக உள்ளனர். நாடு முழுவதும் 1.20 லட்சம் ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளனர். குமரி மாவட்டத்தில் 330 ஒப்பந்த தொழிலாளர்கள், 280 நிரந்தர ஊழியர்களும் பணியாற்றி வருகின்றனர்.இந்த ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஜனவரி மாதம் முதல் 7 மாத காலமாக சம்பளம் வழங்கப்படவில்லை. ஒப்பந்ததாரர்கள் தங்களுக்கு பணம் கிடைக்காத காரணத்தால் சம்பளம் வழங்க முடியாது என மறுத்து வருகின்றனர். சம்பளம் கிடைக்காத பிரச்னை குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் மனு அளித்தோம். அவர் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.

தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் வசந்தகுமாரிடம் மனு அளித்தோம். இதுபோன்று மதுரை, சென்னையில் உள்ள மத்திய தொழிலாளர் நல அதிகாரிகளுக்கு புகார் மனு அளித்துள்ளோம். தொலைத்தொடர்பு துறை உயர் அதிகாரிகளுக்கும் மனு அளித்துள்ளோம். தொடர்ந்து பல போராட்டங்கள் நடத்தி வருகின்றோம். சம்பளம் கிடைக்காததால் ஒப்பந்த தொழிலாளர்களின் குடும்பங்கள் துன்பத்திலும், துயரத்திலும், வறுமையிலும் வாடி வருகிறது. இதனால் எங்களது கோரிக்கை நிராகரிக்கப்பட்டால் குடும்பத்தினருடன் ஒன்றிணைந்து வரும் 28ம் தேதி நாகர்கோவிலில் குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு மாலைநேர தர்ணா போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். எனவே ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவர்கள் அவர்கள் தெரவித்தனர்.

Tags :
× RELATED ஆழ்கடலில் தங்கி மீன்பிடிக்க...