கல்லணையில் இருந்து பாசனத்திற்கு திறந்த காவிரி நீர் அறந்தாங்கி வந்தது

அறந்தாங்கி, ஆக.22: கல்லணையில் சம்பா பாசனத்திற்காக திறக்கப்பட்ட காவிரி நீர் புதுக்கோட்டை மாவட்ட கடைமடை பகுதிக்கு நேற்று வந்து சேர்ந்தது.புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, திருச்சி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் காவிரி நீரைக் கொண்டு விவசாயம் நடைபெற்று வருகிறது. மேட்டூர் அணையில் இருந்து வரும் காவிரி நீரை கல்லணையில் தேக்கி வைத்து அங்கிருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய்களில் திறந்துவிடப்படுகிறது. ஆங்கிலேயர்களால் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கல்லணைக் கால்வாயில் இருந்து செல்லும் காவிரி நீர் மூலம் தஞ்சை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் சுமார் 2 லட்சத்து 26 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி, மணமேல்குடி, ஆவுடையார்கோவில் வட்டங்களில் மட்டும் சுமார் 22 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.சம்பா சாகுபடிக்காக கடந்த 17ம் தேதி கல்லணை திறக்கப்பட்டது. கல்லணையில் திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று மாலை கடைமடை பகுதியான நாகுடி தலைப்பிற்கு வந்தது. கடைமடை பகுதிக்கு வந்த காவிரி நீரை விவசாயிகள் மலர்தூவி வரவேற்றனர். முன்னதாக அரசர்குளம் பகுதிக்கு வந்த காவிரி நீருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்தும், மலர்தூவியும், தண்ணீரை கீழே விழுந்து வணங்கியும் வரவேற்றனர்.

இதுகுறித்து அப்பகுதி பெண்கள் கூறியது: எங்களின் வாழ்வாதாரமே விவசாயம்தான். எங்கள் பகுதி விவசாயத்திற்கு ஆதாரமே காவிரி நீர்தான். ஓராண்டிற்கு பிறகு எங்களின் வாழ்வாதாரம் காக்க வந்த காவிரி நீரை நாங்கள் வணங்கி வரவேற்கிறோம். இந்த ஆண்டு எங்களுக்கு குறைவில்லாமல், காவிரி நீர் வந்து விவசாயம் செழிக்க வேண்டும் எனவும் நாங்கள் வேண்டினோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.தொடர்ந்து காவிரி நீர் மெயின்வாய்க்கால் வழியாக மும்பாலையை இன்று மாலை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இப்பகுதியில் மழை பெய்து வருவதாலும், காவிரி நீர் வந்துகொண்டு இருப்பதாலும் விவசாயிகள் சாகுபடியை தொடங்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Tags :
× RELATED திருமயம் பஸ் ஸ்டாண்டில் தவறவிட்ட 15 பவுன் நகை உரியவரிடம் ஒப்படைப்பு