ராஜகிரி வாய்க்காலில் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளால் துர்நாற்றம்

பாபநாசம், ஆக. 22: பாபநாசம் அடுத்த ராஜகிரி வாய்க்காலில் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகளால் துர்நாற்றம் வீசுகிறது. எனவே குப்பை கழிவுகளை விரைந்து அகற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கும்பகோணம் தஞ்சாவூர் மெயின் சாலை வழியாக ராஜகிரி வாய்க்கால் ஓடுகிறது. இந்த வாய்க்காலை தூர்வாராததால் தற்போது இந்த வாய்க்கால் பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைகள் கொட்டும் இடமாக மாறி விட்டது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் பல்வேறு தொற்றுவியாதிகள் பரவும் இடமாகிவிட்டது. இதனால் கும்பகோணம் தஞ்சாவூர் மெயின் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மூக்கை பொத்தியவாறு செல்ல வேண்டியுள்ளது.

Advertising
Advertising

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூறுகையில், பாபநாசம், அம்மாப்பேட்டை ஒன்றியத்தில் உள்ள பல வாய்க்கால்கள், குளங்கள் தூர்வாரப்படவில்லை. இதுபோல் ராஜகிரி வாய்க்காலும் பல ஆண்டுகளாக தூர்வாரவில்லை. தற்போது இந்த வாய்க்கால் குப்பை கொட்டும் இடமாகி விட்டது. நிலத்தடி நீர்மட்டம் கீழே சென்றுவிட்ட நிலையில் நீர்நிலைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற உணர்வு மேலோங்கி வருகிறது. 100 நாள் தொழிலாளர்களை பயன்படுத்தியாவது வாய்க்கால்களை தூர்வார வேண்டும். வாய்க்கால்களில் குப்பை கொட்டுபவர்களுக்கு அபராதம் விதிப்பதுடன் சிறை தண்டனை வழங்க வேண்டும். இதேபோல் ராஜகிரி, பண்டாரவாடை பகுதிகளில் பிளாஸ்டிக் உபயோகம் அதிகமாக இருப்பதால் பிளாஸ்டிக் புழக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்றனர்.

Related Stories: