கும்பகோணம் காவிரியாற்றில் மணலுக்கு அடியில் காசுகளை தேடி எடுக்கும் தொழிலாளர்கள்

கும்பகோணம், ஆக. 22: கும்பகோணம் காவிரியாற்றில் பாசனத்துக்காக தண்ணீர் வரும் நிலையில் ஆற்றில் உள்ள மணலுக்கு அடியில் காசுகளை தேடி எடுக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.கும்பகோணத்தில் உள்ள காவிரியாற்றில் மேலக்காவிரி, சக்கரபடித்துறை, சபீர்படித்துறை, பகவத் படித்துறை, சோலப்பன் தெரு படித்துறை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட படித்துறைகள் உள்ளன. காவிரியாற்றில் கடந்தாண்டு தண்ணீர் வந்தபோது அனைத்து படித்துறைகளிலும் தினம்தோறும் மட்டுமில்லாது விஷேச நாட்களிலும் நீராடி வருவர். இதேபோல் மாதம்தோறும் வரும் அமாவாசை, பவுர்ணமி, மூதாதையர்களின் திதி நாட்கள், மாதம்தோறும் தரப்படும் தர்ப்பணம் என தினந்தோறும் ஏதேனும் நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கும்.அப்போது நீராட வருபவர்கள், கையிலுள்ள காசுகள் உள்ளிட்ட சுவாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக உள்ள பொருட்களை தண்ணீரில் விடுவர். இதேபோல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் குளிக்கும்போது அவர்களது தோடு, மூக்குத்தி, கொலுசு உள்ளிட்ட பொருட்கள் அவர்களுக்கு அறியாமல் கழன்று சென்றுவிடும். இந்த காசு மற்றும் பொருட்கள், ஆற்றில் தண்ணீர் குறைந்தவுடன் மணலுக்கு அடியில் சென்று விடும்.

Advertising
Advertising

இதையொட்டி ஆண்டுதோறும் பட்டீஸ்வரத்தை சேர்ந்தவர்கள் காவிரியாற்றில் 2 அடிக்கு மேல் மணலை எடுத்து விட்டு அதில் வரும் தண்ணீரை கொண்டு சல்லடையில் சளிப்பார்கள். மணல்கள் கீழே சென்றவுடன் பொருட்கள் சல்லடையில் நிற்கும்.இதில் அவர்களுக்கு காசு கிடைக்கும். சில நேரங்களில் தங்கம், வெள்ளி நகைகளும் கிடைக்க வாய்ப்புள்ளது. மேலும் ஆழமாக தோண்டி மணலை எடுத்து பார்க்கும்போது பழங்காலத்து பொருட்கள் மற்றும் காசுகள் கிடைக்கவும் வாய்ப்புள்ளது.தற்போது காவிரியில் தண்ணீர் வரும் நிலையில் வயிற்று பிழைப்புக்காக கும்பகோணம் பாலக்கரை காவிரியாற்றில் சல்லடையை கொண்டு அலசி ஏதேனும் பொருட்கள் கிடைக்குமா என்று ஏழை தொழிலாளர்கள் தேடி பார்த்து வருகின்றனர்.

Related Stories: