×

உணவு பாதுகாப்புத்துறை உரிமம் வழங்கும் முகாம்

பேராவூரணி, ஆக. 22: பேராவூரணியில் தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை உணவு பாதுகாப்பு பிரிவின்கீழ் உணவு வணிகர்களுக்கு உரிமம் மற்றும் பதிவுச்சான்று வழங்கும் முகாம் நேற்று நடந்தது. உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பேராவூரணி சுப்பிரமணி,பட்டுக்கோட்டை முத்துக்குமார் ஆகியோர் பங்கேற்று சான்றிதழ் வழங்கி பேசியதாவது: இந்தியா முழுவதும் உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006 மற்றும் விதிகள் 2011 முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. உணவு வணிகம் செய்பவர்கள், கட்டாயம் உணவு பாதுகாப்பு துறையில் இருந்து உரிமம், பதிவு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். எனவே உணவு பொருட்கள் சார்ந்த பெட்டிக்கடை, மளிகைக்கடை, தேனீர்கடை, உணவகங்கள், குளிர்பான கடைகள், தண்ணீர் கேன் மற்றும் பாட்டிலில் குடிநீர் அடைத்து விற்பனை செய்பவர்கள், பேக்கரி, இனிப்பகங்கள், ஆடு, மாடு, கோழி மற்றும் மீன் வியாபாரம் செய்பவர்கள், சமையல் தொழில் செய்பவர்கள், தெருவோரம் உணவு விற்பனை செய்பவர்கள், பழக்கடைகள், பால் வியாபாரம், இட்லி மாவு அரைத்து விற்பவர்கள், சத்துணவு, ஊட்டச்சத்து மையங்கள், திருமண மண்டபங்கள், மது விற்பனை மற்றும் பார்கள், கேண்டீன் ஆகிய வியாபாரம் செய்யும் அனைவரும் பதிவு செய்து உரிமம் மற்றும் சான்றிதழ் பெற வேண்டும். முகாமில் பதிவு செய்யாதவர்கள் இ சேவை மையங்களில்ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம் என்றார்.முகாமில் விண்ணப்பித்த 27 பேருக்கு உடனடியாக பதிவு சான்று மற்றும் உரிமம் வழங்கப்பட்டது.



Tags :
× RELATED திருவையாறு நூலகத்தில் உலக புத்தக தின விழா