காரைக்காலில் சொசைட்டி கல்லூரி பேராசிரியர்கள், ஊழியர்கள் காலவரையற்ற போராட்டம்

காரைக்கால், ஆக.22: ஏழாவது ஊதியக் குழு பரிந்துரையை நிறைவேற்ற வலியுறுத்தி, காரைக்காலில் உள்ள சொசைட்டி கல்லூரி பேராசிரியர்கள், ஊழியர்கள் நேற்று 2ம் நாளாக காலவரையற்ற போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.புதுச்சேரி அரசு சார்பு கல்வி நிறுவனங்களாக சொசைட்டி அமைப்பின்கீழ் காரைக்கால் பெருந்தலைவர் காமராஜர் பொறியியல் கல்லூரி, பெருந்தலைவர் காமராஜர் கல்வியியல் கல்லூரி, பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், பாலிடெக்னிக் கல்லூரி, மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி உள்ளிட்டவை இயங்கி வருகிறது.

இக்கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், ஊழியர்கள், தங்களுக்கு 7வது ஊதியக் குழு பரிந்துரையை புதுச்சேரி அரசு உடனே நிறைவேற்ற வேண்டும். 6வது ஊதியக் குழுவின் நிலுவை அகவிலை படியைத் தாமதமின்றி வழங்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த ஜனவரி மாதம் காலவரையற்ற பணி புறக்கணிப்புப் போராட்டத்தை நடத்தினர். தொடர்ந்து, கோரிக்கை நிறைவேற்றுவதாக புதுச்சேரி அரசு அளித்த வாக்குறுதியை ஏற்று போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர்.இந்நிலையில், 6 மாதங்கள் கடந்தும், இதுநாள்வரை கோரிக்கை நிறைவேறாததைக் கண்டித்து கடந்த 1ம் தேதி முதல் கருப்பு பேட்ஜ் அணிந்து பணி செய்து வந்தனர். போராட்டத்தை தீவிரப்படுத்தும் வகையில் நேற்று முன்தினம் முதல் காலவரையற்ற பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று 2ம் நாளாக நடைபெற்ற போராட்டத்தில், 300க்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.


Tags :
× RELATED நாகை மாவட்டத்தில் 1.44 லட்சம்...