×

காலம் கடந்து நடக்கும் தூர்வாரும் பணி கல்லணையில் திறக்கப்பட்ட தண்ணீர் சம்பாவுக்கு பயன்தராது

நாகை, ஆக. 22: கல்லணையில் திறந்து விடப்படப்பட்ட தண்ணீர் சம்பா சாகுபடிக்கு பயன்தராது என்று நாகை மாவட்ட விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.காவிரி டெல்டா மாவட்டமான தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் ரூ.60 கோடி மதிப்பில் 250 தூர்வாரும் பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இதில் நாகை மாவட்டத்தில் நீர் ஆதாரங்களை செம்மைப்படுத்தி விவசாயிகள் பயன்பெறும் வகையில் நீர்வள ஆதாரத்துறையின் மூலமாக சுமார் ரூ.17 கோடி மதிப்பீட்டில் 82 பணிகள் செய்யப்படவுள்ளது. இந்த குடிமராமத்து பணிகள் வாயிலாக ஆறுகள், கால்வாய்கள் மற்றும் வாய்க்கால்கள் ஆகியவற்றை தூர்வாருதல், பழுதடைந்த கட்டுமானங்களை புதுப்பித்தல் மற்றும் அடைப்பு பலகைகளைப் புதுப்பித்தல் போன்ற சிறப்பு பழுதுபார்க்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளது.நாகை மாவட்டத்தில் வெண்ணாறு வடிநிலக்கோட்டத்தில் ரூ.690 லட்சம் மதிப்பீட்டில் 29 பணிகள் எடுக்கப்பட்டு பதிவு செய்யப்பட்ட 25 பாசன சங்கங்களின் உறுப்பினர்கள் மூலம் பணிகள் செய்யப்படுகிறது. காவிரி வடிநிலக் கோட்டம் (தஞ்சை) கீழ் ரூ.173.65 லட்சம் மதிப்பில் 12 பணிகள் எடுத்துக்கொள்ளப்பட்டு பதிவு செய்த 10 பாசன சங்கங்களின் உறுப்பினர்கள் மூலம் பணிகள் நடைபெறுகிறது. காவிரி வடிநிலக்கோட்டம் (மயிலாடுதுறை) கீழ் ரூ.796 லட்சம் மதிப்பில் 41 பணிகள் எடுத்துக்கொள்ளப்பட்டு பதிவு செய்யப்பட்ட 41 பாசன சங்கங்களின் உறுப்பினர்கள் மூலம் பணிகள் நடைபெறுகிறது. இந்த மூன்று வடிநிலக் கோட்டங்களையம் சேர்த்து மொத்தம் ரூ.16.60 கோடி மதிப்பீட்டில் 82 பணிகள் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் திட்டப்பணிகளுக்காக கூடுதலாக 30 தூர்வாரும் பணிகளுக்கு ரூ.12.23 கோடி மதிப்பீட்டில் 677 கி.மீ தூரத்திற்கு ஆறுகள் மற்றும் வாய்க்கால்கள் தூர்வாருவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குடிமராமத்து திட்டத்தின் கீழ் நாகை மாவட்டத்திற்கு 1982 குளங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு குளத்திற்கும் பொதுமக்களின் பங்களிப்பு 10 சதவீதமும், மீதமுள்ள 90 சதவீதம் அரசு நிதியும் சேர்த்து மொத்தம் ரூ.1 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தூர்வாரும் பணிகள் நடைபெறுகிறது.

இந்நிலையில் மேட்டூர் அணையில் டெல்டா மாவட்ட பாசனத்திற்காக ஆகஸ்ட் மாதம் 13ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இதை தொடர்ந்து 17ம் தேதி கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இவ்வாறு திறக்கப்பட்ட தண்ணீர் நாகை மாவட்டத்தை வந்து சேருவதற்குள் தூர்வாரும் பணிகளை முடிக்க மிகவும் அவசியமான பணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் முக்கியத்துவம் கொடுத்து பணிகள் நடந்து வருகிறது. இதற்காக தமிழகம் முழுவதுமிருந்து 180 பொக்லைன் இயந்திரங்கள் காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு வரவழைக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. பணிகளை விரைந்து முடிக்க மேலும் கூடுதலாக 200 பொக்லைன் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டுள்ளது. குடிமராமத்துப் பணிகள் குறைபாடும், தடையுமின்றி 100 சதவீதம் செயல்படுத்தப்பட்டது போல் தூர்வாரும் பணிகளும் குறை இன்றி, குறித்த நேரத்திற்குள் முடிவதை கண்காணிக்க மாவட்டத்திற்கு ஒரு ஐஏஎஸ் அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் பொதுப்பணித்துறையின் சார்பு அலுவலகங்களிலிருந்து 100 க்கும் மேற்பட்ட பொறியாளர்கள் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டில் வெள்ளம் வந்தபோது ஏற்பட்ட சிரமங்களை தவிர்க்கும் வகையில் இந்த ஆண்டு போர்க்கால அடிப்படையில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.நாகை மாவட்டத்தில் தற்பொழுது எடுத்துக் கொண்ட 29 பணிகளில் தண்ணீர் வரத்து கால்வாய்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. மற்ற பணிகள் வரும் பிப்ரவரி மாதத்தில் தொடங்கப்படவுள்ளது. இந்நிலையில் கல்லணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் சம்பா சாகுபடிக்கு பயன்தராது என்று நாகை மாவட்ட விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து கடைமடை விவசாயி பாலையூர் தமிழ்ச்செல்வன் கூறியதாவது: நாகை மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் குடிமராமத்து மற்றும் தூர்வாரும் பணிகள் காலதாமதமாக தொடங்கி நடந்து வருகிறது. இதன் காரணமாக தண்ணீர் வரும் பாதைகள் அடைக்கப்பட்டுள்ளது. ஏ மற்றும் பி பிரிவு வாய்க்கால்களில் தண்ணீர் பாயும். ஆனால் சி மற்றும் டி பிரிவு வாய்க்கால்கள் மற்றும் வயல்களை நோக்கி செல்லும் மிக சிறிய வாய்க்கால்களான ஐடி வாய்க்கால்களில் தண்ணீர் பாய்வது கடினம். குறிப்பாக நாகையில் பெருங்கடம்பனூர் என்ற இடத்தில் புதிய கதவணை அமைக்கும் பணி நடந்து வருகிறது. அதேபோல் குடவாசல் பகுதியில் காப்பனமங்கலம் பகுதியில் சோழன் ஆற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணியும், வலங்கைமான் அருகே சாரநத்தம் என்ற இடத்தில் 2 கதவணைகள் கட்டும் பணியும் நடந்து வருகிறது.இதே போல் காவிரி டெல்டா மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பணிகள் நடந்து வருவதால் பல இடங்களில் தண்ணீர் தேக்கி வைக்கப்படுகிறது. கர்நாடக அரசு மேட்டூர் அணைக்கு உபரி நீரை தான் திறந்து விடுகிறது. தொடர்ச்சியாக மேட்டூர் அணைக்கு கர்நாடக அரசின் உபரி நீர் வருமா என்பது சந்தேகம் தான். செப்டம்பர் மாதத்தில் கர்நாடகாவில் தென்மேற்கு பருவ மழை குறைந்துவிடும். அதன்பின்னர் அங்கிருந்த தண்ணீர் கிடைப்பது அரிது. நேரடி நெல் விதைப்பிற்கு அதிக அளவு தண்ணீர் தேவைப்படும். அந்த நேரத்தில் தண்ணீர் இல்லை என்றால் சம்பா சாகுபடி செய்து பயன் இல்லாமல் போய்விடும். எனவே செப்டம்பர் மாதம் 10ம் தேதிக்கு பின்னர் நாகை மாவட்டத்திற்கு தண்ணீர் வந்தால் மட்டுமே சம்பா சாகுபடி முழுமையாக கைகொடுக்கும். இருப்பினும் முழு நம்பிக்கையோடு நாகை மாவட்டத்தில் சம்பா சாகுபடி பணிகளை விவசாயிகள் தொடங்கியுள்ளனர் என்றார்.

Tags :
× RELATED கோடை வெயில் சுட்டெரிப்பதால் இளநீர்,...