×

தனியார் மயமாக்கலை எதிர்த்து 2வது நாளாக பாதுகாப்பு துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ஆவடி, ஆக.22: மத்திய அரசை கண்டித்து 2வது நாளாக தொழிற்சாலைகள் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் 41பாதுகாப்புத் துறை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. மேற்கண்ட நிறுவனங்களில் 82ஆயிரம் தொழிலாளர்களும், 40 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்களும் பணியாற்றி வருகின்றனர். இந்த நிறுவனங்களை பொதுத்துறை நிறுவனமாக மாற்றி தனியார் மயமாக்க மத்திய அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. இதனையடுத்து, பாதுகாப்பு துறை நிறுவனங்களை சேர்ந்த தொழிற்சங்கங்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.இதற்கிடையில், பாதுகாப்புத்துறை நிறுவனங்களின் அனைத்து தொழிலாளர்களும் நேற்று முன்தினம் முதல் 41 பாதுகாப்புத்துறை நிறுவனங்களில் ஒரு மாத கால வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், ஆவடியில் உள்ள பாதுகாப்புதுறை நிறுவனங்களில் மட்டும் 10ஆயிரத்திற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைக்கு செல்லவில்லை.

இந்நிலையில் நேற்று 2வது நாளாக ஆவடியில் உள்ள படைத்துறை உடைத்தொழிற்சாலை, டேங்க் பேக்டரி, இன்ஜின் பேக்டரி ஆகிய தொழிற்சாலைகளில் முன்பு ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள்  கலந்து கொண்டு மத்திய அரசின் போக்கை கண்டித்து காலை, மாலை வேளைகளில்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்று கண்டன உரையாற்றினர். இந்த வேலைநிறுத்த போராட்டத்தினால் மூன்று தொழிற்சாலைகளில் 2வது நாளாக உற்பத்தி தடைப்பட்டது. மேற்கண்ட தொழிற்சாலைகள் முன்பு துணை கமிஷனர் ஈஸ்வரன் தலைமையில் ஏராளமான போலீசார் இரவு, பகலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags :
× RELATED திருவள்ளூர் (தனி) நாடாளுமன்ற தேர்தல்...