ஆவடி, அம்பத்தூரில் வழிப்பறி சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது

ஆவடி, ஆக. 22: ஆவடி அடுத்த அயப்பாக்கம், வீட்டுவசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் பாஸ்கரன் (54). கண்டக்டர். கடந்த 19ம் தேதி,அயப்பாக்கம்-திருவேற்காடு சாலையில் நடந்து வந்த அவரை பைக்கில் வந்த 3 பேர் வெட்டி செல்போன், பணத்தை பறித்துச் சென்றனர்.இதேபோல் ஆவடி அருகே கோணாம்பேடு, திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (45). தனியார் நிறுவன ஊழியர். கடந்த 19ம் தேதி பைக்கில் வந்த 3 பேர் வழிமறித்து,  2 சவரன் சங்கிலி மற்றும் செல்போனை பறித்துச் சென்றனர்.ஆவடி அடுத்த ஆரிக்கம்பேடு, செல்லியம்மன் நகரை சேர்ந்தவர் வெங்கடேசன் (75). மெக்கானிக். அம்பத்தூர் சிடிஎச் சாலை கிருஷ்ணாபுரம் பகுதியில் பைக்கில் வந்தபோது, கத்தியை காட்டி மிரட்டி, 2 சவரன் சங்கிலியை பறித்துச் சென்றனர். மேற்கண்ட 3 வழிப்பறி சம்பவங்கள் குறித்தும் ஆவடி, திருமுல்லைவாயல்,  அம்பத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது கொள்ளையர்கள் பற்றிய விவரம் தெரியவந்தது.இதனையடுத்து ஆவடி உதவி கமிஷனர் ஜான் சுந்தர், திருமுல்லைவாயில் இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன், சப் இன்ஸ்பெக்டர் சேகர் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கொள்ளையர்களை தேடினர்.

இந்நிலையில் வழிப்பறியில் ஈடுபட்ட நுங்கம்பாக்கம் பொன்னிங்கிபுரத்தை சேர்ந்த சஞ்சய் ராகுல் (19), கொருக்குப்பேட்டை பாரதி நகரை சேர்ந்த செல்வக்குமார் (23) மற்றும் வில்லிவாக்கத்தை சேர்ந்த 17 வயது சிறுவர்கள் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பின்னர் போலீசார், சஞ்சய் ராகுல், செல்வக்குமாரை அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும் இரண்டு சிறுவர்களை திருவள்ளூர் சிறார் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.


Tags :
× RELATED போதைப்பொருட்கள் 1500 கிலோ பறிமுதல்