அத்திவரதர் வைபவத்தில் பணியாற்றிய துப்புரவு தொழிலாளர்களுக்கு கலெக்டர் கவுரவிப்பு

காஞ்சிபுரம், ஆக.22: அத்திவரதர் வைபவத்தில் பணியாற்றிய துப்புரவு பணியாளர்களுக்கு கலெக்டர் பொன்னையா சால்வை அணிவித்து இனிப்பு வழங்கி கவுரவித்தார்.காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் அத்திவரதர் வைபவம் 48 நாட்கள் நடைபெற்றது. இந்த வைபவத்தில்  உள்ளூர், வெளியூர், வெளிமாநிலங்களில் இருந்து சுமார் 1  கோடியே 7 ஆயிரம் பேர் தரிசனம் செய்துள்ளனர்.இந்த வைபவத்துக்கு வந்த பக்தர்கள், பயன்படுத்தி தூக்கி எறிந்த குடிநீர் பாட்டில்கள் , காலணிகள், குப்பைகள், கழிவுகள் என தினமும் 30 டன் அகற்றப்பட்டன. இதனை சென்னை உள்பட 4  மாநகராட்சிகள், 58 நகராட்சிகளை சேர்ந்த ஊழியர்கள் 3,217 பேர் 150 வாகனங்கள் மூலம் 3 மணி நேரத்தில் அகற்றி சிறப்பாக பணியாற்றினர்.

தமிழக முதல்வர் மேலும் 2 நாட்களுக்கு துப்புரவு பணியாளர்கள் நகர் முழுவதும் உள்ள துப்புரவு பணிகளை மேற்கொள்வார்கள் என அறிவித்தார். இதையொட்டி, துப்புரவு பணிகள் நிறைவடைந்தன. இந்நிலையில், கலெக்டர் பொன்னையா, அத்திவரதர் வைபவத்தில் சிறப்பாக பணியாற்றிய துப்புரவு பணியாளர்களுக்கு காஞ்சிபுரம் அண்ணா அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் சால்வை அணிவித்து, இனிப்பு வழங்கி பாராட்டினார்.இதுகுறித்து துப்புரவு பணியாளர்கள் கூறுகையில் கடந்த 50 நாட்களாக தமிழகம் முழுவதும் இருந்த துப்புரவு பணியாளர் ஒருங்கிணைந்து தினமும் குறைந்த நேரத்தில் குப்பைகளை அகற்றி, பக்தர்களுக்கு சுகாதாரத்தை அளித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் எங்களை பாராட்டி கவிரவித்த கலெக்டருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம் என்றனர்.நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சுந்தரமூர்த்தி, காஞ்சிபுரம் நகராட்சி ஆணையர் மகேந்திரன் உள்பட நகராட்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Tags :
× RELATED அறிவியல் செயல்திட்டம் போட்டியில்...