×

செம்மஞ்சேரி குடிசை மாற்று வாரியத்தில் வீடு வாங்கி தருவதாக 14.95 லட்சம் மோசடி : இருவர் கைது

அண்ணாநகர்: செம்மஞ்சேரியில் உள்ள குடிசை மாற்று வாரியத்தில் வீடு வாங்கி தருவதாக கூறி பலரிடம்  ₹14.95 லட்சம் மோசடி செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.சென்னை முகப்பேர், ஜெ.ஜெ.நகரை சேர்ந்தவர் லிங்கபாண்டியன் (60). ஆட்டோ டிரைவர். இவர் தன்னுடன் ஆட்டோ ஓட்டி வரும்  டிரைவர்களிடம் போரூர் அடுத்த கொளப்பாக்கத்தில் உள்ள தனது உறவினர் முத்துக்குமார் (40) என்பவர்  இருப்பதாகவும், பெரும்பாக்கம் செம்மஞ்சேரியில் உள்ள குடிசை மாற்றுவாரியத்தில் தனக்கு அரசு வீடு வாங்கி தந்திருப்பதாகவும் கூறி அதற்கான அரசு ஆணையை காட்டி உள்ளார். இதனால் ஆட்டோ டிரைவர்கள் சிலர் இவர்களிடம் தங்களுக்கும் குடிசை மாற்று வாரியத்தில் அரசு வீடு ஒதுக்கீடு செய்து தர வேண்டும் என தலா ₹65 ஆயிரம் வீதம் என, 30க்கும் மேற்பட்டோர் கொடுத்துள்ளனர். மேலும் கடந்த சில  மாதங்களுக்கு முன்பு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும் கூறி அரசு ஆவணங்களை பணம் கொடுத்தவர்களிடம் இருவரும் கொடுத்துள்ளனர்.

ஆவணங்களை சரி பார்த்தபோது அவை அனைத்தும் போலியான ஆவணங்கள் என  தெரியவந்தது. இதையடுத்து கொடுத்த பணத்தை திருப்பி கேட்டபோது இருவரும் பணத்தை தராமல் மிரட்டி உள்ளதாக தெரிகிறது. இதில் பயந்து போன பணத்தை இழந்தவர்கள் இதுகுறித்து ஜெ.ஜெ.நகர் போலீசில் புகாரளித்தனர். வழக்குப்பதிவு  செய்த உதவி ஆய்வாளர் சுதாகர் விசாரணை செய்து பணம் வாங்கி மோசடி செய்த முத்துக்குமார், லிங்கபாண்டியன் ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் இருவரும் ₹14,95,000 பணம் பெற்றுக்கொண்டு வீடு ஒதுக்கீடு செய்ததுபோல்  போலியான ஆவணங்களை கொடுத்து ஏமாற்றியதை ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து கைது செய்த இருவர் மீது 420, 465, 406, 506 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Tags :
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...