புழல் பகுதியில் கட்டி முடித்து 2 ஆண்டுகள் ஆகியும் பூட்டிக்கிடக்கும் மருத்துவமனை: உடனே திறக்க வலியுறுத்தல்

புழல்: புழலில் கட்டி முடித்து, 2 ஆண்டுகள் ஆகியும் நகர்ப்புற சமுதாய நல மருத்துவமனை பூட்டி கிடப்பதால் உடனே திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுத்தி உள்ளனர்.சென்னை மாநகராட்சி புழல், 23வது வார்டு அலுவலகம் அருகில் கடந்த 7 ஆண்டுகள் முன்பு மாநகராட்சி சார்பில் நகர்ப்புற சமுதாய நல மருத்துவமனை கட்டிடப்பணிகள் தொடங்கியது. தற்போது இந்த கட்டிட பணி முடிந்து 2 ஆண்டு ஆகியும்  மருத்துவமனை மக்கள் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது. இந்த மருத்துவமனை திறந்துவைக்கபட்டால் பொது மருத்துவம், குடும்ப நலம், மகப்பேறு மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம், இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், டெங்கு காய்ச்சல், மலேரியா, காசநோய், கருப்பை வாய் புற்றுநோய்  சிகிச்சைகளுக்கு பொதுமக்கள் பயன்பெறலாம். மேலும், இசிஜி, ஸ்கேன் மற்றும் பரிசோதனை இலவசமாக வழங்கப்படும் என கூறப்படுகிறது.

இதனால் புழல், புத்தாகரம், கதிர்வேடு, சூரப்பட்டு, ரெட்டேரி, லட்சுமிபுரம், கல்பாளையம், செங்குன்றம், வடபெரும்பாக்கம், வடகரை, பாடியநல்லூர், சோழவரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பயன் பெறுவார்கள். இதுவரை  மருத்துவமனை திறக்கப்படாததால் சுமார் 15 கிலோ மீட்டர் துரமுள்ள சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவனை, சென்னை அரசு ராஜிவ்காந்தி மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளுக்கு பொதுமக்கள் பல்வேறு சிகிச்சைக்காக சென்று  வருகின்றனர். இதனால் பொதுமக்களுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்படுகிறது. எனவே பணி முடிந்து தயாராக உள்ள மருத்துவமனை கட்டிடத்தை இனியும் பூட்டிய நிலையில் வைத்திருக்காமல் சம்மந்தப்பட்ட மாநகராட்சி உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை  எடுத்து மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: