×

அய்யப்பன்தாங்கல், ஸ்ரீபெரும்புதூரில் ரவுடி, கூலிப்படை தலைவன் கழுத்து அறுத்து படுகொலை: போலீசார் தீவிர விசாரணை

பல்லாவரம்: போரூர் அடுத்த பெரியகொளுத்துவாஞ்சேரி மற்றும் ஸ்ரீ பெரும்புதூர் அருகே பிரபல ரவுடி மற்றும் கூலிப்படை தலைவன் நேற்று  கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டனர். போரூர் அய்யப்பன்தாங்கல் அடுத்த பெரிய கொளுத்துவாஞ்சேரியை சேர்ந்தவர் வசந்தகுமார் (23). பிரபல ரவுடி. இவர் மீது, போரூர் காவல் நிலையத்தில் கொலை வழக்கு மற்றும் சென்னையில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் திருட்டு,  வழிப்பறி, அடிதடி மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் போரூர் காவல் நிலையத்தில் இவர் சரித்திர பதிவேடு குற்றவாளியாக உள்ளார்.  இந்நிலையில் கடந்த மூன்று மாதத்திற்கு முன் போரூர் ஏரி  பகுதியில் நடந்த கொலை வழக்கு ஒன்றில் வசந்தகுமார் சிறை சென்றார். இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறையில் இருந்து வெளியே வந்தார். நேற்று முன்தினம் இரவு நண்பர் ஒருவர், மது அருந்த அழைத்துள்ளார். அப்போது வெளியே சென்ற வசந்தகுமார் பிறகு வீட்டிற்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. அவரது செல்போனும் அணைத்து வைக்கப்பட்டு இருந்து.
இதனால் பதறிய அவரது மனைவி வினிதா (20) பல்வேறு இடங்களில் தேடினார். இறுதியில் வீட்டின் அருகே உள்ள சுடுகாடு பகுதியில் தகன மேடை அருகே கழுத்து அறுக்கப்பட்டு, இறந்த நிலையில் வசந்தகுமார் கிடந்தது தெரியவந்தது.

தகவலறிந்து, மாங்காடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வசந்தகுமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து ஏற்கனவே நடந்த கொலைக்கு பழிக்குப்பழியாக வசந்தகுமார் கொலை செய்யப்பட்டாரா அல்லது முன் பகை காரணமாக எதிரிகள் யாரேனும் இவரை கொலை செய்தனரா? என்று பல்வேறு கோணங்களில்  விசாரணை நடத்தி வருகின்றனர். ஸ்ரீபெரும்புதூர்: சென்னையில் இருந்து பெரும்புதூர் வழியாக காஞ்சிபுரம் நோக்கி ஒரு கார் நேற்று மாலை வந்து கொண்டிருந்தது. பெரும்புதூர் ராஜிவ்காந்தி நினைவிடம் அருகே கார் சென்றபோது, காரின் கதவை திறந்து வாலிபர் ஒருவர்  சாலையில் இறங்கி ஓட ஆரம்பித்தார்.உடனே காரில் இருந்து 5 பேர் இறங்கி கத்தி, வீச்சரிவாள் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு அவரை துரத்தினர். பின்னர் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நடுரோட்டில் வைத்து வாலிபரை தலையில் சரமாரியாக வெட்டினர்.  மேலும் முகத்தையும் சிதைத்தனர். இதில் அந்த வாலிபர் ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

இதை பார்த்த அக்கம்பக்கத்தினரும், வாகன ஓட்டிகளும் தலைதெறிக்க ஓடினர். வாலிபர் இறந்ததை உறுதி செய்த பிறகு கொலையாளிகள் வந்த காரில் ஏறி தப்பி சென்றனர். தகவல் அறிந்த பெரும்புதூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து  சடலத்தை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.கொலை நடந்த இடத்தில் ஒரு பை, அடையாள அட்டை கிடந்தது. இதை வைத்து போலீசார் விசாரித்தனர். அதில் இறந்த வாலிபர் தாம்பரம் அருகே மடிப்பாக்கம் பகுதியை சேர்ந்த லால் என்கிற சங்கர்லால் (38) என்பது தெரியவந்தது. இவர்  பிரபல ரவடி. இவர் மீது தஞ்சாவூரில் நடைபெற்ற இரட்டை கொலை வழக்கு, கோயம்புத்தூரில் ஒரு கொலை முயற்சி, மேலும் பல்வேறு மாவட்டங்களில் வழக்குகள் உள்ளன. இவர் கூலிப்படை தலைவனாக வலம் வந்துள்ளார்.
இந்நிலையில் இந்த கொலை பழிக்குப்பழியாக நடைபெற்றதா? அல்லது கூட்டாளிகளிடையே தொழில் போட்டி காரணமாக நடந்ததா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags :
× RELATED தேர்தல் நிதியை சுருட்டியதாக உள்கட்சி...