மகாலட்சுமி நகரில் வீடுகளை அகற்ற எதிர்ப்பு வனத்துறை அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகை: 3 பேர் தீக்குளிக்க முயற்சி

துரைப்பாக்கம்: துரைப்பாக்கத்தில் வீடுகளை அகற்ற வந்த அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் 3 பேர் தீக்குளிக்க முயன்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை மாநகராட்சி 15வது மண்டலம் 194 வார்டுக்கு உட்பட்ட ஒக்கியம் துரைப்பாக்கத்தில் உள்ள மேட்டுக்குப்பம் மகாலட்சுமி நகரில் 70க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அரசு  சார்பில் குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, வீட்டு வரி, குடிநீர் இணைப்பு, மின்சார இணைப்பு உள்ளிட்ட அனைத்தும் வழங்கப்பட்டுள்ளது.இந்நிலையில் நேற்று வனத்துறை அதிகாரிகள் 10க்கும் மேற்பட்டோர் இப்பகுதிக்கு வந்து, “நீங்கள் குடியிருக்கும் பகுதி நீர்நிலை பகுதியாகும்.  அதனால் நீங்கள் வீடுகளை காலி செய்து வெளியேற வேண்டும்” என பயோமெட்ரிக் முறையில்  அங்கு உள்ள வீடுகளை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதி மக்களுக்கும், வனத்துறை அதிகாரிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

Advertising
Advertising

இந்நிலையில் திடீரென இரண்டு பெண்கள் உட்பட 3 பேர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றனர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த வனத்துறையினர் அவர்கள் மீது தண்ணீர் ஊற்றி மீட்டனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “நாங்கள் இங்கு 25 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறோம். நேற்று திடீரென எங்கள் பகுதிக்கு வனத்துறையினர் வந்து நாங்கள் குடியிருக்கும் பகுதி நீர்நிலை என கூறி காலி செய்ய சொல்லி  மிரட்டுகின்றனர். நாங்கள் குடியிருக்கும் பகுதி நீர்நிலை என்றால் எங்கள் பகுதியை ஒட்டி அடுக்குமாடி குடியிருப்புகள், தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளன. அவர்களிடம் சென்று வனத்துறையினர் எதுவும் கேட்பது கிடையாது. ஒரு இடத்தில்  ஐந்து வருடத்திற்கு மேல் குடியிருந்தால் அவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என நடைமுறையில் உள்ளது. இங்கு குடியிருப்பவர்கள் அனைவரும் கூலி வேலைக்கு சென்று அன்றாடம் வரும் கூலியை சேமித்து அந்த பணத்தை வைத்து இந்த இடத்தை வாங்கி வீடு கட்டி குடியிருந்து வருகிறோம். எங்களை இந்த இடத்தை காலி செய்ய சொன்னால்  நாங்கள் எங்களை இங்கேயே மாய்த்து கொள்வோம். எனவே இதுகுறித்து தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

Related Stories: