×

கே.பி.வித்யாதரன் பருவமழையால் இடியும் நிலையில் தொகுப்பு வீடுகள்

ஆண்டிபட்டி, ஆக.20: பருவமழையால் ஆண்டிபட்டி மற்றும் சுற்றி உள்ள கிராமங்களில் அரசு கட்டி கொடுத்த தொகுப்பு வீடுகள் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. உயிர்ப்பலி ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஆண்டிபட்டி நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள புள்ளிமான் கோம்பை, டி.சுப்புலாபுரம், லட்சுமிபுரம், கோத்தலூத்து, ஜி.உசிலம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் 100க்கும் மேற்பட்டோருக்கு அரசு இலவச கான்கிரீட் வீடுகளை 30 ஆண்டுகளுக்குமுன் கட்டி கொடுத்துள்ளது. ஆனால் இந்த வீடுகள் பராமரிப்புகள் இல்லாததால், மேற்கூரையில் உள்ள சிமெண்ட் காரைகள் பெயர்ந்து கம்பிகள் துருபிடித்து தொங்கிக் கொண்டு உள்ளது. இதனால் வீட்டில் குடியிருப்பவர்கள் பயத்துடன் வாழ்ந்து வருகின்றனர். கடந்தாண்டு பெய்த கஜா புயல் மழைக்கு புளிமான்கோம்பை, லட்சுமிபுரம், ராஜகோபாலன்பட்டி போன்ற கிராமங்களில் இருந்த அரசு வீடுகள் இடிந்து விழுந்தன. ஆனால் உயிர் பலி ஏதும் இல்லை. இதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் ஆய்விற்கு பின் சில வீடுகள் பராமரிப்பு பணிகள் நடைபெற்றன. ஆனால் மேலும் பல வீடுகள் இடியும் அபாய நிலையில் இருக்கின்றன. தற்போது ஆண்டிபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் குடியிருப்போர் அச்சத்தில் உள்ளனர்.இதுகுறித்து திமுக எம்எல்ஏ மகாராஜன் கூறுகையில், ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் அரசு கட்டிக்கொடுத்த வலுவிழந்த வீடுகளில் பெயர் பட்டியலை தயார் செய்து, மாவட்ட கலெக்டரிடம் கொடுத்திருக்கிறேன். மிக விரைவில் அதற்கான வேலைகள் நடைபெறும் என்று தெரிவித்தார்.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், கடந்த 30 ஆண்டுக்கு முன்பு அரசு 40க்கும் மேற்பட்ட தொகுப்பு வீடுகளை கட்டி கொடுத்தது. ஆனால் வீடுகள் உரிய பராமரிப்பு இல்லாததால் கடந்த ஆண்டு பெய்த தொடர் மழைக்கு இடிந்து விழுந்து தரைமட்டமானது. இதனால் உயிர் சேதம் ஏதும் இல்லை. ஆனாலும் பல தொகுப்பு வீடுகளின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டு காரைகள் பெயர்ந்து ஆங்காங்கே கம்பிகள் துருப்பிடித்துள்ளது. இதனையடுத்து ஊராட்சி நிர்வாகத்தினர் பாதிப்புக்குள்ளான வீடுகளின் நிலவரங்களை கணக்கு எடுத்தனர். அதில் சில வீடுகள் மட்டும் பராமரிப்பு வேலைகள் நடைபெற்றது. ஆனால் தற்போது தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால் வீடுகளின் உள்பகுதியில் மழை நீர் ஒழுகிறது. மேலும் வீடுகள் எப்போது விழும் என்ற அச்சத்தில் பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர். எனவே மாவட்ட கலெக்டர் பழுது ஏற்பட்ட தொகுப்பு வீடுகளை நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

Tags :
× RELATED கள்ளத்துப்பாக்கி வைத்திருந்தவர் கைது